பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்புச் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் இடையிலான காலிறுதி ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
முதல் சுற்று முதல் காலிறுதியில் ரபேல் நடாலை சந்திக்கும்வரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் அட்டகாசமாக விளையாடி வந்தார் ஜோகோவிச். ஆனால் துவக்கத்தில் ஜோகோவிச் தடுமாறவே, நடால் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டில் சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் தனதாக்கினார்.
இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. எனினும் மீண்டும் நடால் அட்டகாசமான ஷாட்களை அடித்து ஜோகோவிச்சை திணறடிக்க, மூன்றாவது செட் 6-2 என்ற கணக்கில் நடால் வசம் சென்றது. நான்காவது செட்டில் இருவரும் சரிக்கு சமமாக விளையாட ஆட்டம் நெடு நேரம் நீடித்தது. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 7-6 எனக் செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார் நடால். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 4 மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்தது.
“இது மிகவும் விசேஷமானது. இது மிகவும் கடினமான போட்டி. வரலாற்றில் சிறந்த வீரர்களில் நோவக் ஜோகோவிச்சும் ஒருவர். நோவாக்கை தோற்கடிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அது உங்கள் சிறந்த முறையில் விளையாடுவதுதான்” என்று போட்டியில் வென்றபின் நடால் கூறினார். பிரெஞ்ச் ஓபனில் 13 முறை பட்டம் வென்றுள்ள நடால், அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவை எதிர்த்து விளையாட உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்