Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவளித்ததால், ராஜஸ்தானில் தையல் கலைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை வைத்திருந்த கணையா லால், செவ்வாய்க்கிழமை தனது கடையில் வழக்கம்போல பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இருவர் உடை தைக்க அளவு எடுக்க வேண்டும் என அவரிடம் பேசி உள்ளனர். கணையா லால் அளவெடுத்துக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் கத்தியால் அவரை தாக்கியுள்ளார். மற்றொருவர் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். வாடிக்கையாளர்கள் போல கடைக்குள் நுழைந்த இருவரும் தையல் கடைக்காரரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

அந்த கடை முழுவதும் ரத்த வெள்ளமானதாகவும், கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கணையா லால் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் எனவும் அந்தப்பகுதியில் உள்ள வியாபாரிகள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கணையா லால் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கொலையாளிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் மேலும் பதட்டம் அதிகரித்தது. படுகொலையை செய்தது நாங்களே என்றும் நூபுபூர் சர்மாவுக்கு ஆதரவாக இணையதளத்தில் பதிவிட்டதால் கணையா லாலை வெட்டி கொன்றதாகவும் அவர்கள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத வெறியால் படுகொலையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் கடும் அதிருப்தியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கணையா லால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீசாருக்கு தகவல் அளித்த போதிலும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கொலையாளிகளில் ஒருவர் வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பது அரசியல் ரீதியாகவும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என ராஜஸ்தான் போலீசார் தகவல் அளித்துள்ளனர். வீடியோவில் காணப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

image

கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலோட் உறுதியளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தரப்படும் என பேசியுள்ள ராஜஸ்தான் முதல்வர், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், அசோக் கெலாட் அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டதாகவும் பாரதிய ஜனதா தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பதட்டம் அதிகரித்த நிலையில் சில இடங்களில் கல்வீச்சு நடைபெற்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அமைதிப்படுத்த போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராமநவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாகவும் பல்வேறு இடங்களில் மதக்கலவரம் நடைபெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கை குறைக்க செய்யப்படும் சதி என ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதில் குற்றச்சாட்டை வலியுறுத்தி உள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்கலாம்: ’கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றினார்கள்’.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை - ஆண் நண்பர் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்