வாடிப்பட்டி அருகே 3 மாத குழந்தையை விற்ற தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தீவிர தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பச்சிளங் குழந்தை விற்பனை மீண்டும் மெல்லமெல்ல தலைதூக்கத் துவங்கியுள்ளது. சென்றவாரம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை முஸ்லீம் தம்பதியிடம் விற்று பணம் பெற்றதாக தாய் மற்றும் குழந்தையை சட்டவிரோதமாக வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள டி. ஆண்டிபட்டி சின்னமநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த சின்னக் கருப்பன் என்பவரின் மனைவி அங்கம்மாள் (45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவின் காரணமாக மீண்டும் கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த மாதம் வாடிப்பட்டி அருகே உள்ள சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அங்கம்மாள், குழந்தையுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த சென்றபோது குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து குழந்தை எங்கே என கேட்ட செவிலியர்களிடம் உறவினர் வீட்டில் உள்ளது. நாளை அழைத்து வருகிறேன் என அங்கம்மாள் கூறியுள்ளார். அடுத்த நாள் சென்று பார்த்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட அங்கம்மாள் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் கிருத்திகா, குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், மாயமான குழந்தை குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், குழந்தையை சில லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த, தாய் அங்கம்மாள் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவர் கிடைத்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்