கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சென்ற விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதியினரிடம் `உங்கள் ரத்தத்தை கழிவறை சென்று கழுவி வந்தால்தான் சிகிச்சை அளிப்பேன்’ என மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என கடலூர் மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதாக சில புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்த தம்பதியொருவர், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது ரத்தத்தை கழிவறை சென்று சுத்தம் செய்து வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என அரசு மருத்துவமனை ஊழியர் கூறுயுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அந்தக் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “இது மனித நேயமற்ற செயல். இதுபோல் தொடர்ந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சில ஊழியர்கள் அடாவடி செய்கிறார்கள். அதை காட்சிப் படுத்த முயற்சித்தபோது `நாங்கள் அரசு ஊழியர்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என மிரட்டுகின்றனர்” என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பரமணியமை தொடர்பு கொண்டு புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அவர், “இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் நோயாளிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என கூறி, மாற்றத்துக்கு உறுதியளித்துள்ளார்.
-செய்தியாளர்: ஸ்ரீதர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்