தன் மீது வீண் பழி சுமத்துவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேற்கு மாம்பலத்தில் கோயில் நிர்வாகியாக இருந்து வரக்கூடிய கிருஷ்ணபிரசாத் என்பவர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரொன்று அளித்திருந்தார். அதில் மதுவந்தி பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி, பெற்றோர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து ஒய்.ஜி மகேந்திரனின் மகள் ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் `கிருஷ்ணபிரசாத் என்பவர் எனது கலை குழுவில் இடம்பெற்றிருந்தார். அப்போது சமுதாயத்தில் பின்தங்கிய இரு குழந்தைகளுக்கு பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கி தரவேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
இதனால் கருணை அடிப்படையில் பள்ளியில் இடம் பெற்று கொடுப்பதாக நான் வாக்களித்தேன். ஆனால் அதற்கிடையில் எனது பெயரை பயன்படுத்தி கிருஷ்ணபிரசாத் பெற்றோர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணபிரசாத்திடம் இருந்து இதுவரை நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. போலியான ஆவணங்களை கிருஷ்ணபிரசாத் தயார் செய்து என் மீது வீண் பழி போடுகிறார். இதற்காக உடனடியாக கிருஷ்ணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக்கோரியுள்ளார்.
- செய்தியாளர்: சுப்பிரமணியன்
இதையும் படிங்க... தொழில்நுட்பக் கோளாறு: தடைபட்ட மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்