Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மருத்துவமனையில் தூய்மையற்ற படுக்கை: துணைவேந்தரை படுக்கச் செய்த அமைச்சர் - வைரல் வீடியோ

அரசு மருத்துவமனையில் அழுக்காக இருந்த படுக்கையில், துணைவேந்தரை படுக்கச் செய்த பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாராட்டும், விமர்சனமும் கலவையாக கிடைத்து வருகின்றன.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மன் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு லஞ்சப்புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்லா அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதிதாக சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்ற சேட்டன் சிங் ஜவுராமஜ்ரா இன்று ஃபரீத்கோட் அரசு மருத்துவமனையை திடீரென பார்வையிட்டார்.

image

அப்போது அந்த அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைழக்கத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ் பகதூர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு படுக்கை அழுக்காக இருந்தை கண்ட அமைச்சர், படுக்கை விரிப்பு ஏன் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது என துணைவேந்தரிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்கு மழுப்பலாக பதிலளித்த துணைவேந்தர் ராஜ் பகதூரை அந்த படுக்கையில் படுக்குமாறு அமைச்சர் கூறினார். முதலில் சற்று தயங்கி அவர், பின்னர் அமைச்சர் கூறுகிறாரே என அந்த படுக்கையில் படுத்தார். இதையடுத்து, இனி படுக்கைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யுங்கள் என அமைச்சர் கூறினார்.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில், மற்றொரு தரப்பினர் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் பர்கத் சிங் கூறுகையில், "மலிவான விளம்பரத்துக்காக ஆம் ஆத்மி நடத்தும் நாடகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று பாபா ஃபரீத் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ப்ளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்" என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்