வயநாட்டில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 360 பன்றிளை சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி கொல்லும் பணி துவங்கி இருக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பகுதியில் 2 பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நோய் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டிருக்கிறது.
இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் நோய் கண்டறியப்பட்ட பன்றி பண்ணையில் உள்ள 360 பன்றிகளையும் கொல்ல மாநில அரசு முடிவு எடுத்தது. இந்த நிலையில் மானந்தவாடி துணை ஆட்சியர் ஸ்ரீ லட்சுமி, நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து பன்றி பண்ணை உரிமையாளர்களை நேரில் சந்தித்த அவர், நிலைமையை அவர்களிடம் எடுத்துக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள 360 பன்றிகளையும் கொல்லும் பணி துவங்கி இருக்கிறது என்றார்.
இதைத்தொடர்ந்து இந்த பணிகளுக்காக இரண்டு மூத்த கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர் இப்பகுதிக்கு வந்துள்ளனர். பன்றிகள் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பான முறையில் ஆழமான குழி தோண்டி புதைக்கப்படும். நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்