உசிலம்பட்டி அருகே மதுரை - தேனி வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை முதல் தேனி வரை அகல ரயில்பாதை பணிகள் அண்மையில் முடிவுற்றன. இதையடுத்து, மதுரை முதல் தேனி வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள பாறைப்பட்டி எனும் இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை அங்கிருந்த மக்கள் கண்டுபிடித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்த விரிசல் ஏற்பட்ட இடத்தை ரயில் மெதுவாக கடந்து சென்றது. இதன் காரணமாக அந்த ரயில் ஒருமணிநேரம் தாமதமாக தேனிக்கு சென்றது.
இதன் தொடர்ச்சியாக, ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விரிசல் சரிசெய்யப்பட்டது. 5 மணிநேரத்துக்கும் மேலாக இந்தப் பணி நடைபெற்றதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதால் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்