இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். சென்னையில், நாளை செஸ் ஒலிம்பியாட் தொடரை அவர் தொடங்கிவைக்கிறார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க 2 துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிரமமின்றி விடுதிக்கு செல்ல வழிகாட்டுகின்றனர்.
வீரர்களின் போக்குவரத்துக்காக 115 பேருந்துகள், 100-க்கும் மேற்பட்ட கார்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இத்தகைய ஏற்பாட்டை பாராட்டியுள்ள வெளிநாட்டு வீரர்கள், இது போன்ற வரவேற்பை எங்கும் கண்டதில்லை என்று கூறியுள்ளனர். “வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் அழகாக உள்ளது. பல நாட்டிற்கு பயணித்து உள்ளோம், இது போன்று பார்த்ததில்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழ்நாடு அரசின் ஏற்பாடு சிறப்பாக உள்ளது என்று, தனது வெளிநாட்டு நண்பர்கள் கூறியதாக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். “செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு செய்ய வழக்கமாக 2 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாடு அரசின் அர்ப்பணிப்பால் 3 மாதங்களில் ஏற்பாடுகள் தயாரானது. சிறப்பான ஏற்பாட்டால் வெளிநாட்டு நண்பர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று கூறினார் விஸ்வநாதன் ஆனந்த்.
இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். 2 நாட்கள் பயணமாக பிரதமர் சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்