ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிர்வாகம்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
எனினும் ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கையை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலிக் கணக்குகள் 5 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே ட்விட்டரை வாங்குவேன் என்றும் தடாலடியாக சில நிபந்தனைகளை முன்வைத்து, ட்விட்டர் உடனான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எலான் மஸ்க். இதனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது.
இச்சூழலில் தற்போது ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எலான் மஸ்க். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை ட்விட்டர் வழங்கத் தவறியதால், தனது ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளன. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ''முன்னதாக போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்றால் எலான் மஸ்க் ஒரு பில்லியன் டாலரை முறிவு (break-up) கட்டணமாக செலுத்த வேண்டும். இதை முன்னிறுத்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளோம். இந்த சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: ”லீவுக்காக பயணிகளிடம் உதவி கேட்ட நபர்” - எப்படி தெரியுமா? மும்பையில் நடந்த சுவாரஸ்யம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்