ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதெல்லாம் இப்போது அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்டது. அப்படியாக ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்யும் போது பல நேரங்களில் பல விதங்களில் குளறுபடிகள் நிகழ்ந்தாலும் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக காண கிடைக்கிறது.
அந்த வகையில், டோம் மெர்னாக் என்ற பயனர் ஒருவர் Linkedin பகிர்ந்துள்ள பதிவு வைரலாகியிருக்கிறது. அதில், UAE-ல் உள்ள நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தபடி ஆன்லைன் மூலம் மெக்டொனல்ட் விடுதியில் இருந்து உணவு ஆர்டர் செய்துள்ளார்.
வாடிக்கையாளர் மருத்துவமனையில் இருந்து ஆர்டர் செய்ததை உணர்ந்து அவருக்கு இலவசமாக உணவையும் வைத்து, அதனுடன் ஒரு வாசகத்தையும் இணைத்து அனுப்பியிருக்கிறது.
அதில், “நீங்கள் மருத்துவமனையில் இருந்து உணவு ஆர்டர் செய்ததை அறிந்தோம். நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த டோம் மெர்னாக், “இதுப்போன்று வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து வைப்பது நல்லதாக இருக்கிறது. மெக்டொனல்ட் நிர்வாகத்தின் இந்த செயல் பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை கண்ட நெட்டிசன்களில் சிலர் மெக்டொனல்ட்ஸின் செயலை பாராட்டியிருந்தாலும், சிலர் அதனை விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து ஆர்டர் செய்தால் அவர்கள் நோயாளியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, இரவுப்பணியில் இருக்கும் செவிலியராகவும் இருக்கலாம் என பதிவிட்டிருக்கிறார்கள்.
மேலும், மருத்துவமனையில் இருக்கும் நோயாளி மெக்டொனல்ட்ஸின் ஜங்க் உணவு வகைகளை சாப்பிடுவது எப்படி நல்லதாகும்? அதனை மெக்டொனல்ட்ஸும் ஆதரிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்