வாழ்க்கையில் கொடுமையான அதிர்ச்சிப் பாதைகளை இளம்பருவத்திலேயே கடந்துசென்ற ஒரு பெண் தற்போது பள்ளிப்படிப்பை முடித்து தனது 22வது வயதில் நம்பிக்கையுடன் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். யார் அந்த பெண்? அப்படி என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்? - பார்க்கலாம்.
டீனேஜ் பருவத்திலேயே மனிதர்களை கடத்தி விற்று பணம் சம்பாதிக்கும் சில வல்லூறுகளிடையே சிக்கியது அவளது துரதிர்ஷ்டம். 4 மாதங்களில் 3 மாநிலங்களில் விற்கப்பட்டாள்; அப்போது பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதைக்கப்பட்டாள். அதைவிட கொடுமை என்னவென்றால் தன்னைவிட 30 வயது மூத்த நபருக்கு கட்டாய திருமணமும் செய்துவைக்கப்பட்டாள் என்கிறார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சிஐடி அதிகாரி. மேற்குவங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்திலுள்ள போக்சோ நீதிமன்றம், தற்போது 22 வயதான பெண்ணின் இளம்பருவத்தை சீரழித்த குற்றத்திற்காக 4 பேருக்கு 20 ஆண்டுகளும், இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் அந்த பெண் மீட்கப்பட்ட மாநிலமான உத்தராகண்ட், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து 6 பேரை கைதுசெய்தனர். அவர்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ராகுல் மற்றும் ஒரு பெண்ணும் அடக்கம்.
இதுகுறித்து அந்த புடவைக்கடையில் வேலைசெய்யும் அந்தப் பெண்ணின் தந்தை கூறுகையில், ’’கடவுள் அருளால் எங்கள் மகள் எங்களுக்கு திரும்ப கிடைத்திருக்கிறாள். என்னவெல்லாம் நடந்ததோ அது எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. மகளுடைய அவல நிலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.
அப்படி என்ன நடந்தது அந்த பெண்ணின் வாழ்க்கையில்?
7 வருடங்களுக்கு முன்பு...
சமூக வலைதளத்தில் சந்தித்த ஒருவரிடம் காதலில் விழுந்தாள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த அந்த பெண். பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, புதிய வாழ்க்கையைத் தேடி காதலனை நம்பிச் சென்றாள். கொல்கத்தாவின் சைன்ஸ் சிட்டி அருகில் நின்றிருந்த காதலன் ராகுல் அவருடைய சொந்த ஊரான பீகாருக்கு அந்த பெண்ணை பேருந்தில் அழைத்துச்செல்ல அங்கிருந்து 10 கி.மீட்டர் தொலைவிலிருந்த பாபுகாத்திற்கு கூட்டிச்சென்றார். 15 வயது சிறுமியான அவளிடம் தான் சீக்கிரம் வருவதாக வாக்கு கொடுத்து, பேருந்தில் உட்கார வைத்துவிட்டு சென்ற ராகுல் திரும்ப வரவில்லை. பாவம் அவளுக்கு தெரியவில்லை தனது காதலன் தன்னை ரூ.1.5 லட்சத்துக்கு ஆள் கடத்தல்காரர்களிடம் விற்றிருக்கிறான் என்று. 2015ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அவளுடைய வாழ்க்கையில் கொடூரமான அத்தியாயம் தொடங்கியது.
பேருந்தில் அமர்ந்திருந்த சிறுமியிடம் ராகுலின் நண்பன் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அவளை ஹவுரா ரயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று அங்கிருந்து ரயிலில் பீகாருக்கு அழைத்துச்சென்றான். அங்கு மீண்டும் கமல் என்ற நபரிடம் அவள் விற்கப்பட்டாள். கமல் அவளை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணிடம் விற்றுவிட்டான். மூன்றாவதாக அவளை விலைகொடுத்து வாங்கிய சித்ரா, சிறுமியைவிட 30 வயது பெரியவரான தனது 45 வயது சகோதரனுக்கு அவளை கட்டாய திருமணம் செய்துவைத்தாள். ஒரு மாதம் அவளுடன் இருந்த அந்த நபரோ அவளை மீண்டும் சித்ராவிடமே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சித்ராவின் மகன் அவளை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்க தொடங்கியிருக்கிறான்.
அந்த காலகட்டத்தில்தான் அவளுக்கு சித்ராவின் செல்போன் கிடைத்திருக்கிறது. யாரும் இல்லாத நேரத்தில் தனது தாய்க்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தான் இருக்கிற இடத்தை தெரிவித்திருக்கிறாள். இதற்கிடையே சிறுமியின் செல்போனை ட்ரேஸ் செய்த போலீசார் கடைசியாக பீகாரில் அது பயன்படுத்தப்பட்டதையும், அதன்பிறகு ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். அதைவைத்து சிறுமியின் காதலன் ராகுலை கைதுசெய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சித்ரா பயந்துபோய் கமலுக்கு போன் செய்து சிறுமியை அழைத்துக்கொண்டு போகுமாறு கூறியிருக்கிறார். கமலும், அவரது உதவியாளர் பிஷாமும் சித்ராவின் வீட்டிற்குச் சென்று சிறுமியை உத்தராகண்டிலுள்ள காசிப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
ராகுலைத் தொடர்ந்து சித்ரா மற்றும் அவரது மகன் லுவையும் போலீசார் கைதுசெய்துவிட்டனர். இந்த தகவல் கிடைத்தவுடனே ஆத்திரமடைந்த கமலும், அவரது உதவியாளரும் பலமுறை சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் காசிப்பூர் ரயில்நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ரயில்நிலையத்தில் ஒரு மூலையில் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்திருந்த சிறுமையை ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்து மீட்டு மீண்டும் மேற்குவங்கத்திற்கு அழைத்துவந்துவிட்டனர்.
இதுகுறித்து சிஐடி அதிகாரி கூறுகையில், ‘’அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது அதீத அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தாள். அவளால் பேசமுடியவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியாகவே இருந்தாள். நாங்கள் அவளை ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலமுறை அழைத்துச்சென்ற பிறகே, அவள் மனம் உடைந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தாள்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மே மாதம் மீட்கப்பட்டதிலிருந்து அந்த சிறுமி அரசு காப்பகத்திலேயே தங்கியிருக்கிறாள். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த அவள் தற்போது தனது 22வது வயதில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கனத்த இதயத்துடன் தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பெண்ணை பேருந்தில் இருந்து கொண்டு வந்து கமலிடம் விற்றவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார் அந்த அதிகாரி.
இந்த வழக்கு வட 24 பார்கனாஸ் மாவட்டத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேர் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர். அதில் சித்ரா மற்றும் காதலன் ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், சித்ராவின் சகோதரர், மகன் லுவ், கமல், பிஷாம் ஆகிய 4 பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும் விதித்து ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
நடந்தது எல்லாம் நடந்ததே; பல இன்னல்களை தாண்டி தங்களிடம் திரும்ப கிடைத்த தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைத்து ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்ற ஆசையில் உள்ளனர் பெற்றோர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்