பாம்பு கடித்து பலியான அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பவானிபூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் மிஸ்ரா (38) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் மிஸ்ரா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, புதன்கிழமை அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அரவிந்த் மிஸ்ராவின் இளைய சகோதரரான கோவிந்த் மிஷாரா (22) என்பவரும் அங்கே இருந்துள்ளார்.
அன்றைய நாளில் இறுதிச்சடங்கு முடிந்து கோவிந்த் மிஷாரா தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில் அறைக்குள் நுழைந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. மேலும், அவருக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் அந்த பாம்பு கடித்துள்ளது. பாம்புக்கடியால் இருவரும் அலறித் துடிக்கவே மருத்துவமனையில் அவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக கோவிந்த் மிஷாரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சந்திரசேகர் பாண்டே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே பகுதியில் பாம்புக் கடியால் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ கைலாஷ் நாத் சுக்லா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அரசிடமிருந்து நிவாரண நிதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோவில் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்