Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'விராட் கோலி ஓபனிங்கில் தொடர்ந்து இறங்குவாரா?' - கடுப்பான கே.எல்.ராகுல் மழுப்பல் பதில்!

'டி20 போட்டிகளிலும் விராட் கோலி தொடர்ந்து ஓபனிங்கில் இறங்குவாரா?' என்று நிருபர் ஒருவர் கேள்வியெழுப்ப, அதற்கு கே.எல்.ராகுல், ''அதனால் என்ன? நான் வெளியே உட்கார வேண்டுமா என்கிறீர்களா?'' என்று சற்று நிதானமிழந்து பதிலளித்தார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. பிளேயிங் லெவனை பொருத்தவரை, இந்திய அணியில் கேப்டன் ரோகித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தாா். இதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

image

ராகுல் - கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 119 ரன்கள் சோ்த்து அசத்தியது. அதில் கே.எல்.ராகுல் 62 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களுடன் (12 பவுண்டரி, 6 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சுமாா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சா்வதேச சதத்தைப் பதிவு செய்தாா் கோலி.

இந்திய அணி நிர்ணயித்த 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் போட்டிக்குப் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேப்டன் கே.எல்.ராகுலிடம்,  டி20 போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து ஓபனிங் இறக்கப்படுவாரா? என்று நிருபர் ஒருவர் கேள்வியெழுப்ப, அதற்கு ராகுல், ''அதனால் என்ன? நான் வெளியே உட்கார வேண்டுமா என்கிறீர்களா?'' என்று சற்று நிதானமிழந்து பதிலளித்தார்.

தொடர்ந்து அவர், ''விராட் கோலி இன்று ரன்கள் குவித்தது அணிக்கு ஒரு பெரிய போனஸ், மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதத்தில் கோலி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்பது எனக்குத் தெரியும். அவர் தனது ஆட்டத்தை எப்போதும் சிறப்பாக செய்துவந்தார். அது இன்று அருமையாக வேலை செய்தது. ஒரு அணி, ஒவ்வொரு வீரருக்கும் நடுவில் நேரம் ஒதுக்குவது முக்கியம்.

image

2-3 இன்னிங்ஸ் விளையாடினால் உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். கோலி அப்படி விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. விராட் கோலியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்; நீங்கள் அவரை இத்தனை ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் ஓபனிங்கில் இறங்கினால் மட்டுமே சதம் அடிப்பார் என்றில்லை. நம்பர் 3இல் பேட் செய்தாலும் அவரால் சதமடிக்க முடியும். ஒரு பேட்ஸ்மேன் சதம் அடித்தால் மட்டுமே ஃபார்மில் இருக்கிறார் என்று அனைவரும் நினைக்கிறார்கள். 3 இலக்க ரன்கள் மீது அனைவருக்கும் அவ்வளவு வெறி. கடந்த 2-3 ஆண்டுகளில் அணிக்கான கோலியின் பங்களிப்புகள் அளப்பரியவை. கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது மனநிலை, அணுகுமுறை மற்றும் பணி நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஆட்டத்திற்குத் தயாராகும் விதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. இன்று டிரஸ்ஸிங் ரூமில் கோலியின் சதத்தை பார்த்து  நாங்கள் பெரியளவில் ரியாக்ட் செய்யவில்லை. ஏனெனில் சதம் அடிப்பது அவருக்கு சகஜமான ஒன்று'' என்று கூறினார்.

இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி -ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்திய அணி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்