Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஒரு பெண் ஆளுநர் என்றும் பாராமல் பாகுபாடு காட்டுகிறீர்கள்' -கேசிஆர் மீது தமிழிசை விமர்சனம்

தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு பெரும்பாலான நேரங்களில் தம்மை அவமானப்படுத்தி வருவதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில்  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. ஆளுநர் தமிழிசை பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, ஆளுநர் பங்கேற்கும் விழாவுக்கு முதல்வர் கேசிஆர் செல்லாமல் இருப்பதும், எந்தவொரு அரசு நிகழ்ச்சிக்கும் ஆளுநர் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவிற்கு வரும்போதெல்லாம், அவரை வரவேற்கச் செல்லாமல் முதல்வர் கேசிஆர் புறக்கணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு பெரும்பாலான நேரங்களில் தம்மை அவமானப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள தமிழிசை, ஒரு பெண் ஆளுநர் என்றும் பாராமல் பாகுபாடு காட்டி வருவதாக அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''நான் எங்கு சென்றாலும், நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஆளுநர் அலுவலகத்திற்கான மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும். ஆனால், அது இங்கு இல்லை. முதல்வர், அக்கட்சி எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை உள்ளது. ஆளுநர் மாளிகை என்ன தீண்டத்தகாத இடமா? எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நான் சர்ச்சைக்குரிய நபரும் அல்ல.

திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாதது தவறு. அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருந்தார். அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

image

குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், மாநில மக்களுக்கு உரையாற்றவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள் காட்டி ஆளுநர் மாளிகையிலேயே தேசியக்கொடி ஏற்றும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின அணிவகுப்பு நடந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. நான் வலிமையான நபர். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை யாராலும் தடுக்க முடியாது. ஆன்மிக யாத்திரை ஒன்றில் பங்கேற்க ஹெலிகாப்டர் கேட்ட போதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. சாலை மார்க்கமாகவே சென்றேன்.

image

ஆளுநர் மாளிகை அவமானப்படுத்தப்படுகிறது. மாவட்டங்களுக்கு செல்லும் போது ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் வழிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. அங்கு செல்லக்கூடாது, இங்கு செல்லக்கூடாது எனக் கூறுகின்றனர். ஆளுநருக்கு என எந்த எல்லையும் கிடையாது. மக்களுக்கு பணியாற்றுவதே எனது நோக்கம். ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும்'' என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: புதுச்சேரி: நீட் தேர்வில் வெற்றிபெற மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் - ஆளுநர் தமிழிசை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்