மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவரான மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்களாக இருந்தது கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஒருநாள் தங்களது மவுனத்தைக் கலைப்பர்'' என்றார். மம்தாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ். குறித்த கருத்துக்காக மம்தா பானர்ஜியை கடுமையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ''மம்தா பானர்ஜியின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டுவது இது முதல்முறை கிடையாது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தார். இடதுசாரிகளின் அரசை கவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை மம்தா பானர்ஜி நாடினார். தேர்தலில் ஆதாயங்களை பெற இந்து அடிப்படைவாதிகளையும் முஸ்லீம்களையும் என இரு தரப்பினருடனும் இணக்கமாக சென்றிருக்கிறார்'' என்றார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பதிவில், “2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் மம்தா பானர்ஜி அந்த அமைப்பை பாராட்டிப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது. இவ்வளவு வெளிப்படையான நேர்மையான மம்தாவின் பேச்சுக்கு அவரது இஸ்லாமிய தலைவர்கள் அவரை பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தயாரிப்பு தான் மம்தா என்பது அவரது கருத்து மூலமே நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கைக்குரியது அல்ல என்பது மீண்டும் தெளிவாகிறது"என்றார்.
இதற்கிடையே மம்தா பாராட்டிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பே அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஜிஷ்ணு பாசு கூறுகையில், ”மம்தாவின் புகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் புறக்கணிக்கிறது. தேர்தலுக்கு பின்னர் நடந்த வன்முறையில் அமைப்பில் உள்ள 60 பேர் கொல்லப்பட்டனர். ஆர்எஸ்எஸ் மீதான அரசியல் வன்முறையை அவர் நிறுத்தவேண்டும். தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி எதிராக வாக்களித்தவர்களுக்கும் அவர் முதல்வர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷ், கூறுகை யில், ''யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற மம்தா பானர்ஜியின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள். நாங்கள் மம்தாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.
இந்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சௌகதா ராய் கூறுகையில், ''ஒவ்வொரு அமைப்பிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளனர் என்பதையே மம்தா பானர்ஜி கூற முற்பட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை தோற்கடித்த நாங்கள், எங்களின் மதச்சார்பின்மையை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை'' என்றார்.
இதையும் படிக்க: கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார் - 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்