மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்குபெற, 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜான் கேம்ப்பெல் மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது சொந்த ஊரான கிங்ஸ்டனில் வீட்டில் இருந்தபோது, ஊக்கமருந்து எதிர்ப்பு சோதனையின் கீழ் இரத்த மாதிரியை வழங்க அழைத்தபோது, அதற்கு ஜான் கேம்ப்பெல் மறுத்ததாக ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து சோதனைக்கு 29 வயதான ஜான் கேம்ப்பெல் ஒத்துழைக்காததை அடுத்து, ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின்படி, ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக, 4 ஆண்டு தடைக்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாக விசாரணைக்குழு 18 பக்க முடிவை இன்று வெளியிட்டுள்ளது. ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதாக, அதாவது ஜட்கோ (JADCO) விதி 2.3-ஐ மீறியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜட்கோ விதி 10.3.1-ஐ மேற்கோள் காட்டி, நோட்டீஸ் கொடுக்கப்பட்ட கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் 4 ஆண்டுகளுக்கு போட்டியில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கிங்ஸ்டனில் பிறந்து வளர்ந்த ஜான் கேம்ப்பெல், கடந்த 2019-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். கடைசியாக வங்கதேசத்திற்கு எதிராக கடந்த ஜூன் மாதம் க்ரோஸ் ஐலெட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜான் கேம்ப்பெல் விளையாடினார்.
29 வயதான ஜான் கேம்ப்பெல் இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் 888 ரன்களை எடுத்துள்ளார். அதில் 26 சராசரியில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். 50 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஐந்து இன்னிங்ஸ்களில் 248 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக வெறும் 137 பந்துகளில் 179 ரன்கள் எடுத்தது அவரது மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஆகும். அத்துடன் இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்