மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரத் துவங்கியுள்ள பாகுபலி காட்டு யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் பாகுபலி யானை நடமாட துவங்கியுள்ளதால் அதனை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுமாக இருந்த பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை பிடிக்க வனத் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன
.மூன்று கும்கி யானைகளை வரவழைத்து வந்து பாகுபலி யானையை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால்; பிடியில் சிக்காமல் தந்திரமாக தப்பியபடி இருந்த பாகுபலி யானை. அவ்வப்போது மலைக் காட்டுக்குள் சென்று மறைந்து விடுவதும் பின்னர் திடீரென மீண்டும் ஊருக்குள் நுழைந்து குடியிருப்பு பகுதிகளில் கம்பீரமாக உலா வருவதுமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில மாத காலமாக யார் கண்களிலும் தென்படாத பாகுபலி யானை தற்போது மீண்டும் வழக்கம் போல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சாலையை கடந்து சமயபுரம் என்னுமிடத்தில் இரு புறமும் வீடுகள் உள்ள குறுகிய சாலை வழியே நடந்து சென்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் ஊடுறுவி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வழக்கம் போல் நடமாட துவங்கியுள்ளது.
இதனால் உஷாரான வனத் துறையினர் இதன் நடமாட்டத்தை கண்காணிக்கத் துவங்கியுள்ளனர். ஊருக்குள் பாகுபலி யானை நடமாட துவங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஒற்றை யானையை உடனடியாக அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்