Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மனைவி பாஜக வேட்பாளர், சகோதரி காங். பிரச்சார பீரங்கி.. குஜராத் தேர்தலும் ஜடேஜா குடும்பமும்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் அரசியல் பிளவை உண்டாக்கியுள்ளது.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாரதிய ஜனதா கட்சி சார்பாக வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில், ஜடேஜாவின் சகோதரி நைனாபா காங்கிரஸ் கட்சிக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒருபுறம் பாஜக ஆதரவு எனவும், இன்னொரு புறம் காங்கிரசுக்கு பிரச்சாரம் எனவும், ரவீந்திர ஜடேஜாவின் குடும்பம் இரு துருவங்களாக நேர் எதிர் திசைகளில் பயணிக்கிறது.

இந்திய அணியில் மட்டுமல்லாது, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியிலும் ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரராக விளங்குகிறார். சுழல் பந்துவீச்சு மட்டுமல்லாது, சிறப்பான பேட்டிங்கையும் சமீப காலங்களில் வெளிப்படுத்தியுள்ள ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் விளையாடி வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் மனைவி ரிவாபாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களை சமீபத்தில் சந்தித்த ஜடேஜா தம்பதியினர், தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

ரிவாபா ஜாம்நகர்-வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களத்தில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கணவர் ஜடேஜா அவருக்கு ஆதரவாக தொகுதியிலே பிரச்சார பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் நைனாபா தனது சகோதரரின் மனைவிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ரிவாபா திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும், தனது பெயரை ரிவாபா சோலங்கி என வேட்பு மனுவில் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ரிவாபா ஜடேஜா என பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது நைனாபாவின் கேள்வியாக உள்ளது.

ரவீந்திர சிங் என்கிற ரவீந்திர ஜடேஜாவின் பெயர் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என ரிவாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற சர்ச்சை என்றும், காங்கிரஸ் கட்சியிடம் உண்மையான தேர்தல் விவகாரங்கள் ஏதும் விவாதத்திற்கு இல்லை என்றும் ரிவாபா குறிப்பிட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் பெயரை விளம்பரத்துக்காகவும் மற்றும் வாக்குகளை ஈர்க்கவும் பயன்படுத்துவதாக முன் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கிரிக்கெட் உடை அணிந்த சிறார்களை ரிவாபா உடன் அழைத்து செல்வதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சுபாஷ் குஜராத் என்கிற சமூக சேவகர் புகார் அளித்துள்ளார் என நைனாபா குறிப்பிட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் பெயரை சொல்லி வாக்குகளை ஈர்க்கும் எண்ணம் தனக்கு இல்லை என ரிவாபா தெரிவித்துள்ளார். ‘பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக நான் எனது தொகுதியில் கடுமையாக உழைத்து உள்ளேன் என்பதால், எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்’ என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்