குரூப் எஃப்-ல் பெல்ஜியம், குரோஷியா, கனடா, மொராக்கோ அணிகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப்களில் விளையாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் அணிகளின் வரிசையில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் உள்ளன. கனடா 1986-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது உலகக் கோப்பைக்குள் நுழைந்துள்ளது. மொராக்கோ 6-வது முறையாக களமிறங்குகிறது.
பெல்ஜியம் - தரவரிசை 2; பயிற்சியாளர் - ராபர்டோ மார்டினெஸ்: கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை போன்று கால்பந்தில் பெல்ஜியம் சோக்கர்ஸ் என அழைக்கப்படுகிறது. பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டத்தில் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறிவிடும். இதற்கு உதாரணம் 2018 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2020-ம் ஆண்டு யூரோ கோப்பை கால் இறுதியில் இத்தாலியிடமும், யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பை அரை இறுதியில் பிரான்ஸிடமும் பெல்ஜியம் வீழ்ந்திருந்தது. ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் கடந்த தொடரில் 3-வது இடம் பிடித்த நிலையில் கத்தாரில் அந்த நிலையை மேம்படுத்த முயற்சி செய்யும்.
0 கருத்துகள்