கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஏசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி ஆளுநர் ரவி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் திருநாள் நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக கிறிஸ்துமஸ் அமைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்தில், "இயேசுநாதர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்" என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில், "அன்பின் சிறப்பை, வலிமையை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த நாளன்று நாமும் அன்பை விதைப்போம்" எனக் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், "மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையுடனும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் வாழ்த்து அறிக்கையில், "அன்பையும், சகோதரத்துவத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே போதித்து அதிசயம் நடத்தியவர் இயேசநாதர்" என்று தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்தியில், "மனிதர்களுக்கு மன்னிக்கக் கற்றுக்கொடுத்த மகான் இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளனர்.
ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏசுநாதர் போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி சமய வேற்றுமைகளை கடந்து சகோதரத்துவம் மேலோங்கவும் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் விடுத்திருக்கும் அறிக்கையில், “'எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்’ என எந்தக் காலத்துக்கும் போற்றத்தக்க அன்பை போதித்தவர் ஏசுபிரான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவின் வாழ்த்துச் செய்தியில், "இயேசுபிரான் போதித்த தியாகம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் விடுத்திருக்கும் வாழ்த்தில், "இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்துகிறது" எனக் கூறி வாழ்த்தி உள்ளார்.
இவர்கள் தவிர புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில், "ஏசுநாதர் போதித்த கருணை, அன்பு, மன்னிப்பு, சமாதானம் போன்றவை மனித குலத்திற்கு பொதுவானவை" என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்