Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"ராமர் பாலம் இருக்கா இல்லையா என துல்லியமா கூறமுடியாது"- மத்திய அமைச்சரின் பதிலால் பரபரப்பு

ராமர் பாலம் இருக்கிறது என்பதற்கான துல்லியமான ஆதாரம் எதுவுமில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சரே தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கடல் வழி போக்குவரத்திற்கு தடையாக இருக்கும் மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி அங்கு சேது சமுத்திர கால்வாய் திட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சேது சமுத்திர திட்டம் அமைக்கப்பட வேண்டிய பகுதியில் இருக்கும் மேடுகள் ராமர் கட்டிய பாலம் என இதுகாறும் நம்பப்பட்டு வருகிறது. புராண கதையான ராமாயணத்தின் கூற்றுப்படி இலங்கையில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க வானரப் படைகளின் உதவியோடு ராமர் பாலம் கட்டியதாக கூறப்படுகிறது.

Image

ஆகையால் அந்த மணல் மேடுகளை தகர்க்க இந்து ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இப்படி இருக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பியான கார்த்திகேய சர்மா ராமர் பாலம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் பதிலளித்திருந்தார்.

அதில், “இந்திய விண்வெளித்துறையின் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில், ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியவில்லை. 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.

56 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அங்கு இருந்த சரியான கட்டமைப்பை குறிப்பிடுவது கடினமாக இருக்கிறது. அப்பகுதியில் ஏதோ ஒரு கட்டமைப்பு இருந்ததற்காக நேரடியான அல்லது மறைமுகமான குறியீடு இருப்பதாக இப்போதைக்கு கூறலாம்” என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக, ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டுமென ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராமர் பாலம் குறித்து மத்திய அமைச்சர் தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

image

இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியிடம் கடந்த 2007ம் ஆண்டு ராமர் பாலம் குறித்து ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, “ராமர்னு ஒருத்தர் இருந்ததாகவோ, அவர் இன்ஜினியரிங் படித்ததாகவோ, அவர் ஒரு பாலம் கட்டியதாகவோ எந்த சரித்திரமும் இல்லை.” எனக் கூறியிருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்