இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி தரும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர், சூரியகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற வீரர்கள் சொதப்பலாக 'பேட்' செய்து ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணியின் முன்வரிசை பேட்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட், வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உம்ரான் மாலிக் ஒரு ஓவரில் 16 விட்டுக் கொடுத்தார் என்றால் மறுபக்கம் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன் வாரிவழங்கினார். இன்றைய போட்டியில் உம்ரான் நீக்கப்பட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதுடன், டி20 போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் இழக்க வேண்டியது வரும். எனவே இந்திய அணியினர் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரைத் தக்கவைக்க கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: ஷுப்மான் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் , அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), சோதி, லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, பிளேர் டிக்னெர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்