தொழிலாளர்கள் தகராறு குறித்து பரவும் வீடியோ தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைபதிவிடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
டீக்கடையில் தொடங்கிய சிறிய தகராறு!
அதன்படி கடந்த 14ஆம் தேதி அன்று பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இருவர் டீ குடிக்க வெளியே சென்றபோது அங்கு மதுபோதையில் இருந்த தமிழக இளைஞர்கள் சிகரெட் புகை ஊதியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமிழக இளைஞர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாகவும் அதன் பின்னர் டீ இடைவெளிக்கு வெளியே வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்க துரத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அந்த சமயத்தில் வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காவலர்களை கண்டதும் தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட, வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். போலீசார் அந்த பகுதியில் விசாரித்த போது புகார் கொடுக்க யாரும் முன் வராததால் வழக்குப்பதிவு செய்ய முடியாமல் இந்த சம்பவத்தை கைவிட்டனர்.
12 நாட்களுக்கு பிறகு வெளியான வீடியோ! திருப்பூர் காவல் ஆணையரின் விளக்கம்
இதனையடுத்து 12 நாட்களுக்கு பிறகு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி சம்பவம் நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தொழிலாளர்கள் அமைப்பு உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விசாரிக்க கோரிக்கை மனுவை அளித்தனர். இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். ஆகையால் நடந்த சம்பவம் பற்றிய உண்மைத்தன்மை குறித்து விசாரித்தபோதுதான் மேற்குறிப்பிட்ட விவரங்கள் தெரிய வந்ததாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கூறியிருக்கிறார்.
மேலும், “திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பப்பட்டு வருகிறது. ஆகையால் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு தனிப்படை சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறது. இதுகுறித்து யாரும் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்திருக்கிறார்.
மோதலை உருவாக்க நினைக்கிறார்கள் - தொழிற்சங்கத்தினர்!
இந்த நிலையில், “தனிப்பட்ட நபர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை இரு பிரிவு தொழிலாளர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையாக பரப்பி மோதலை உருவாக்கும் சமூக விரோத போக்கை தடுத்து, அமைதிக்குழுவை உருவாக்கி திருப்பூரில் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்.” என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழக இளைஞர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை குறித்த வீடியோவை மையப்படுத்தி சில பிரபலங்களும் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து திருப்பூரில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பூரில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி விரோத போக்கை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் அமைதிக்குழுவை உருவாக்கி தொழிலாளர்கள் மத்தியில் அமைதியை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் . மேலும் ஏ.ஐ.டி.யு.சி சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமும் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் உள்ள திருப்பூரில்..
இச்சம்பவம் பொருளாதார சீர்குலைவால் திருப்பூரில் ஏற்பட்ட பணிப்பாதிப்பையும் ஆர்டர் பாதிப்பையும் திசைத்திருப்பும் சமூக விரோத செயலாக இருக்கக்கூடும் என சந்தேகத்தை எழுப்பும் தொழிற்சங்க நிர்வாகியான சேகர், முதலாளிகள் சம்பளத்தை சீர்படுத்தி நிலையான சம்பளத்தை அறிவித்தால் இது போன்று தொழிலாளர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படாது எனவும், அதை விடுத்து வட மாநிலத்தவர்கள் வருவதால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற போலியான தோற்றத்தை சமூக ஊடகஙகளில் கேலியாக சித்தரிப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்