Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

9வது விக்கெட்டுக்கு 100 ரன்கள்.. தோற்றாலும் சதம் விளாசி கெத்துகாட்டிய இலங்கை கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 10) கெளகாத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் ஜெயித்த பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து இந்திய அணியில் களமிறங்கிய தொடக்க பேட்டர்களான கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சுப்மான் கில் 70 ரன்கள் எடுத்து தசூன் சனகா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ரோகித்தும் 83 ரன்களில் மதுஷங்கா பந்தில் போல்டானார். ஆனால், தனி ஒருவனாய் நின்று இலங்கை பந்துவீச்சைச் சிதறடித்த விராட் கோலி, 80 பந்துகளில் சதம் அடித்ததுடன், பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார். இது, அவருக்கு 45வது சதமாகும்.

image

தொடர்ந்து விளையாடிய அவர் 87 பந்துகளில் 113 ரன்கள் குவித்த நிலையில் மெண்டிஸிடம் கேட்சானார். அதுபோல் கே.எல்.ராகுலும் (39 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (28 ரன்கள்) ஆகியோரும் ஓரளவுக்கு நல்ல ரன்களை எடுத்துக் கொடுத்தனர். இதனால் இந்திய அணி 300 ரன்களைத் தாண்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கசூன் ரஜிதா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கிய களமிறங்கிய இலங்கை தொடக்கம் முதலே விக்கெட்களை வீழ்ந்தது. எனினும் அவ்வணியின் தொடக்க பேட்டர் நிசாங்கா 72 ரன்கள் எடுத்தார். நிசாங்காவைத் தொடர்ந்து அவ்வணியில் டி சில்வா 47 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் நங்கூரமாய் நிற்கத் தொடங்கினார் கேப்டன் தசூன் சனகா. அவர் பொறுப்புணர்ந்து ஆடியபோதும், அணியின் வெற்றியை அவரால் உறுதி செய்ய முடியவில்லை.

image

இறுதிவரை களத்தில் இருந்த அவர், 88 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக சதம் ஒன்றைப் பதிவுசெய்தார். அதில் 12 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். 50 ஓவர்களை முழுமையாக விளையாண்ட இலங்கை அணி, இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்களையும், முகம்மது சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

400 குவிக்க தவறியது; இலங்கையை ஆல் அவுட் செய்யவும் தவறியது இந்திய அணி!

இந்திய அணி, இந்தப் போட்டியில் கூடுதல் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பைக் கோட்டைவிட்டு விட்டது. 38 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, அடுத்த 12 ஓவர்களில் மேலும் விக்கெட்டை இழக்காமல் 100 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்போட்டி ஜவ்வு போன்று இழுத்ததுடன், ரசிகர்களுக்கும் வெறுப்பைத் தந்தது.

தொடக்க விக்கெட்களை இடையிடையே வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இலங்கை கேப்டன் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அதிக சிரமப்பட்டனர். ரோகித்தின் இந்த முயற்சிக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. அதேபோல், இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 400 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலியும் கடைசி சில ஓவர்களில் ஆட்டமிழந்தார். ஒருவேளை விராட் கோலி கடைசி வரை களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் 400 ரன்கள் வந்திருக்கும். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான 2வது போட்டி வரும் 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்