பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட வேலூர் மாவட்டத்திற்கு மற்றொரு மகுடமாக அமைந்திருக்கிறது இளவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வழங்கப்பட்ட புவிசார் குறியீடு.
”இளவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தற்போது எங்களுக்கு பரந்த சந்தை கிடைத்திருப்பதாகவே உணர்கிறோம். அதே சமயம், இந்த பெருமையை நாங்கள் கட்டி காக்க வேண்டும் எனில் அரசு எங்களுக்கு உதவி, விலை நிர்ணயம் செய்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முழு உதவி செய்து எங்களை காக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்திய சுதந்திர போராட்டங்களுக்கு வித்திட்ட 1806 சிப்பாய் புரட்சி நிகழ்ந்த மண் உட்பட பல்வேறு வரலாற்று பெருமைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கியது வேலூர் மாவட்டம். அந்த வகையில் அதற்கு இன்னும் வலுவூட்டும் விதமாகவும் மற்றொரு மகுடமாகவும் அமைந்துள்ளது தற்போது இளவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட இளவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை, புதூர், கரடிகுடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பல விவசாயிகள் இந்த முள்ளு கத்தரிக்காயை பாரம்பரிய முறையில் தொடர்ந்து விளைவித்து வருகின்றனர். வேறெந்த கத்தரிக்காய்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது.
செடி மற்றும் கத்தரிக்காயின் மேல் பாகத்தில் உள்ள தோலில் முட்களாக காணப்படும் இந்த முள்ளுக் கத்தரிக்காய் பயிரை இலவம்பாடி கிராமத்தில் பல தலைமுறைகளாக பயிரிட்டு வருகின்றனர் விவசாயிகள். அப்படி பயிரிடப்படும் இந்த முள்ளு கத்தரிக்காய்க்கு செயற்கை உரம் ஏதும் இடாமல், பாரம்பரிய முறையில் இயற்கை முறையில் பாரம்பரிய விதைகளை கொண்டு விளைவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த கத்திரிக்காயின் சுவை அதிகமாகவும் பெயர் பெற்றதாகவும் விளங்கி வருகிறது.
இளவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கையில் 45 ஆக உயர்ந்து மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து பல தலைமுறைகளாக முழு கத்திரிக்காயை விளைவித்து வரும் விவசாயிகள் கூறுகையில், ”எங்கள் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த விதையை வைத்துத்தான் தற்போது வரைக்கும் பாரம்பரியமான இயற்கை முறையில் எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் முள்ளு கத்தரிக்காயை தொடர்ந்து விளைவித்து வருகிறோம். இன்றைக்கு அதற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதோடு சேர்ந்து எங்கள் மாவட்டமும் நாங்களும் பெருமை கொள்கிறோம்.
வேறு எந்த கத்தரிக்காய்களுக்கும் இல்லாத சிறப்பும் சுவையும் எங்கள் கத்திரிக்காய்க்கு உள்ளது. ஆனால் தற்போது இதனை விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் பரப்பளவும் குறைந்து வருகிறது. காரணம் இதற்கான உரிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்” என்கின்றனர்.
பழனி என்ற விவசாயி கூறுகையில், “எனது மனைவியின் தங்க சங்கிலி உட்பட அனைத்தையும் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து தான் 50 சென்ட் நிலத்திற்கு 60 ஆயிரம் செலவிட்டு பயிரிட்டுள்ளேன். ஆனால், விலை என்பது மிக குறைவாகவே கிடைக்கிறது. இதனால் போட்ட முதலீட்டை கூட எடுக்காமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகிறேன். அரசு எங்களுக்கு உதவும் வகையில் எங்களிடம் இந்த முள்ளு கத்திரிக்காயை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாங்கள் விளைவிக்கும் சுவையான கத்திரிக்காயை அனைவரும் உண்டு மகிழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையாக இருக்கிறது. ஆனால், எங்கள் கஷ்டத்தையும் உணர்ந்து மக்களும் அரசும் எங்களை காப்பாற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மேலும் பல விவசாயிகள் கூறுகையில், ''எங்கள் இளவம்பாடி கிராமத்திற்கு மிக அருகிலேயே தற்போது சிறிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதில் சென்னைக்கும் பெங்களூருக்கும் விமான சேவை தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள். இந்த சூழலில் தற்போது முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் எங்களுக்கு பரந்த சந்தை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனை உறுதி செய்யும் வகையில் இங்கு செயல்பட உள்ள விமான நிலையம் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ எங்களின் முள்ளு கத்திரிக்காயை வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய அரசு முழு உதவி எங்களுக்கு செய்ய வேண்டும். முழுமையாக எங்களுக்கு அரசு கை கொடுத்தால் மட்டுமே நாங்கள் இதிலிருந்து மீண்டு வர முடியும்.
முள்ளு கத்திரிக்காயின் பெருமையையும் பாரம்பரியையும் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து கொண்டு செல்வதற்கும் இந்த உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் உள்ளூர்களிலும் எங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அதனால் நிரந்தர விலை நிர்ணயத்தை அரசு செய்து கொடுக்க வேண்டும். நாங்கள் பாரம்பரிய முறையில் மிகவும் கஷ்டப்பட்டு நல்ல தரமான உடலுக்கு கேடு அற்ற முள்ளுக் கத்திரிக்காய் விளைவித்து தருகிறோம். ஆனால் மக்கள் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக கலப்பு கத்திரிக்காய் மற்றும் ஹைபிரிட் கத்திரிக்காய்களை வாங்கி செல்கிறார்கள். இது எங்களுக்கு ஒரு புறம் நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் வேதனையை அளிக்கிறது. எங்களை ஊக்கப்படுத்த வேண்டிய நுகர்வோரே இப்படி செய்வது கவலை அளிக்கிறது.
எங்கள் இளவம்பாடி முள்ளு கத்தரிக்காயை அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சுவைத்துள்ளனர். இத்தகைய பாரம்பரியம், பண்பாட்டை காக்க வேண்டியது விவசாயிகளாகிய எங்களுடைய பொறுப்பு மட்டுமே அல்ல. நுகர்வோரும் எங்களோடு கைகோர்த்தால் மட்டுமே இதனை காக்க முடியும்.
எங்களின் கத்திரிக்காய்க்கு பல்வேறு மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறுகிறார்கள், பொதுவாக கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் சார்ந்த பிரச்சினைகள் வரும் என கூறுவார்கள் ஆனால் எங்களின் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காயை சாப்பிட்டால் தோல் நன்றாக இருக்கும்” என்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ''பல்வேறு சிறப்புகளைக் கொண்ட எங்கள் வேலூர் மாவட்டத்தில் சுவைக்காக எப்போதுமே பிரபலமான இளவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு பெருமையாகவும் உள்ளது. நாங்கள் தொடர்ந்து இந்த கத்திரிக்காயை தான் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் சமையல் அறையில் முக்கிய அங்கமாக இது இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் சமையலறையில் சமைக்கப்பட்ட முள்ளு கத்திரிக்காய் இன்று உலகம் முழுவதும் சமைக்க இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. அதேபோல் நம்மை போன்ற பொதுமக்களின் ஆதரவும் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது” என கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்