Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெசன்ட் நகர் கடற்கரையில் நிலா திருவிழா! சுவாரஸ்யமாக கூடி பரவசப்பட்ட மக்கள்

பெசன்ட் நகர் கடற்கரையில் தொலைநோக்கியால் நிலவையும் கோள்களையும் பார்வையிடும் நிலா திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, கடற்கரை பரப்பிலிருந்து நிலவின் மேற்பரப்பை கண் குளிர குடும்பத்துடன் பார்த்து சென்றனர் மக்கள்.

ஒரே நேர்கோட்டில் சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்றும் நேற்று முன்தினம் வந்தது. அந்த நிகழ்வை பலர் நேரில் பார்த்தும் புகைப்படங்கள் எடுத்தும் பலரும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இந்நிலையில் அந்த நிகழ்வை கடற்கரையில் இருந்து பொதுமக்கள் கண்டுகளிக்கும் வண்ணம், பள்ளிக்கல்வித்துறை விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து, ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 200 இடங்களில் இந்த நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வரும் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையடுத்து அதை சிறப்பிக்கும் விதமாக இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது.

image

இந்நிலையில் முதல் கட்டமாக பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் இருந்து, தொலைநோக்கி மூலம் நிலவின் நீர் பரப்பு மற்றும் வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்களை பார்க்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு சூரிய அஸ்தமனமான பின்னர் தொலைநோக்கி நிலவின் திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டது. கடற்கரைக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் தொலைநோக்கியில் நிலவின் மேற்பரப்பை கண்டு ரசித்தனர்.

image

தொலைநோக்கியை எவ்வாறு கையாள்வது, கிரகங்களை நோக்கி எப்படி குவியப்படுத்துவது, தொலைநோக்கியின் அவசியம் என்ன, தொலைநோக்கியின் மூலம் நிலவின் மேற்பரப்பில் தெரியும் பகுதிகள் என்ன என்பதை அங்கிருந்த ஆர்வலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர். குடும்பம் குடும்பமாகவும் குழந்தைகளுடனும் வந்து, அதிக அளவில் ஆர்வமுடன் தொலைநோக்கியில் வியாழன் மற்றும் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களை பார்த்து மக்கள் ரசித்தனர். மேலும் தங்களது தொலைபேசியிலும் தொலைநோக்கியின் வழியே நிலவின் படத்தை எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்வை இயற்பியல் விஞ்ஞானி இந்துமதி தொடங்கி வைத்தார்.

image

இதன் தொடர்ச்சியாக இன்று மெரினா கடற்கரையிலும், நாளை அண்ணா நூலகம் போன்ற இடங்களிலும் நிலா திருவிழா நடைபெறுகிறது. இதேபோல
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை அஸ்ட்ரோ கிளப் சார்பில் 40 இடங்களிலும், சென்னை மாவட்டத்தில் சென்னை அஸ்ட்ரோ கிளப் சார்பில் 30 இடங்களிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி அஸ்ட்ரோ கிளப் சார்பில் 25 இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டில் 200 இடங்களில் இந்த நிலா திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

image

நிலா திருவிழாவில் சொந்தமாக தயார் செய்யப்பட்ட மூன்று அங்குளமுள்ள தொலைநோக்கிகள் முதல் எட்டு அங்குல கணினி மயமாக்கப்பட்ட தொலைநோக்கிகள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலா திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டு பயனடைவார்கள் என்றும் நிலா குறித்த விழிப்புணர்வை 10 லட்சம் மக்கள் பெறுவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

வெறும் கண்ணால் பார்ப்பதை விட இதுபோன்ற தொலைநோக்கி உதவி கொண்டு நிலவை பார்ப்பது, பிரமாண்டத்தை ஏற்படுத்துவதாக அதை பார்வையிட்டவர்கள் நம்மிடையே தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்