“நாமும் தான் கடவுளை வணங்குகிறோம்... நாம் என்ன மைக்கில் கத்திக்கொண்டா வணங்குகிறோம்? மைக்கில் கத்தி தான் தொழுகை செய்ய வேண்டும் என்றால் அல்லா என்ன காது கேளாதவரா?” என பாஜக எம்எல்ஏ பேசியுள்ளது நாடு முழுவதும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.
மேலும் “விரைவில் இஸ்லாமியர்கள் கத்திக்கொண்டு தொழும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று விஜய் சங்கல்ப யாத்திரை பிரசாரத்தின் போது கர்நாடகா எம்எல்ஏ கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையும் முன்னிட்டு, கர்நாடகத்தில் ஆளும் பாஜக கட்சியானது தேர்தலில் பெரும்பான்மை அளவில் வெற்றிப்பெருவதற்கான முக்கிய துருப்புச்சீட்டாக, விஜய் சங்கல்ப் யாத்திரையை நடத்திவருகிறது. 20 நாட்களாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இந்த யாத்திரையானது, கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் விஜய் சங்கல்ப யாத்திரையில் பங்குபெற்ற பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசிக்கொண்டிருந்த போது, அருகில் உள்ள மசூதியில் இருந்து தொழுகைக்கான அழைப்பு வந்துள்ளது. அதை கேட்ட பிறகு பேசிய ஈஸ்வரப்பா, “இது பெரிய தலைவலியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ இப்படி கத்திகொண்டு தொழுகை செய்யும் வழக்கம் முடிவுக்கு வரும்” என்று கூறினார். அதற்கு கூடியிருந்த தொண்டர்கள் இடையே கரகோஷங்கள் அதிகமாக எழுந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “நம் பிரதமர் மோடி ஒவ்வொரு மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் மைக்கில் கத்திக்கொண்டு தொழுதால் தான் அல்லாவிற்கு கேட்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாமும் தான் கோயில்களில் பிரார்த்தனை செய்கிறோம், ஸ்லோகங்களை உச்சரிக்கிறோம், நம் பெண்கள் பஜனைப் பாடுகிறார்கள். ஆனால் யாரும் கத்திக்கொண்டு வணங்குவதில்லையே. இவர்கள் மட்டும் மைக் மூலம் இப்படி சத்தமாக கத்தி தான் வணங்க வேண்டும் என்றால், அப்போ அல்லா காது கேளாதவர் என்று தானே சொல்லமுடியும். இப்படி தொழும் அஸான் வழக்கம் தேவையில்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நான் கருதுகிறேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது, தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. கர்நாடகாவை உலுக்கிய ஹிஜாப் பிரச்னையின் போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா “வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவி கொடி மாற்றப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரிவித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்