Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தொடர் வெற்றிகளை பாஜக சாத்தியப்படுத்துவது எப்படி? - ஓர் அலசல்

எத்தனையோ விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்து வந்தாலும் பாஜகவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணம், இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் மூன்று மாநில தேர்தல் முடிவுகள். பாஜகவின் வெற்றி எப்படி மாநில தேர்தல்களில் சாத்தியப்படுகிறது என்பதை இக்கட்டுரை தொகுப்பில் அறிவோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இந்த ஆண்டு நடக்கும் மாநில தேர்தல்களின் வெற்றிகள், முக்கியப் பங்கு வகிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டே மாநிலக் கட்சிகளுக்கு இணையாகத் தேசியக் கட்சிகளும் களத்தில் குதித்து களப்பணியாற்றி வருகின்றன.

image

5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

அந்த வகையில், எப்படி ஒருகாலத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததோ, அதைப்போல பாஜகவும் இருக்க ஆசைப்படுகிறது. அதற்கான வியூகங்களையும் வகுத்து ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்கூட, பாஜக ஆட்சியைப் பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 5 (உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட்) மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப்பைத் தவிர (ஆம் ஆத்மி வெற்றி) மற்ற மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச தேர்தல்கள்

அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச தேர்தல்களில் குஜராத்தில் மீண்டும் பாஜக அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றது. இமாச்சலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநில தேர்தல் முடிவுகளிலும் இரண்டில் (திரிபுரா, நாகாலாந்து) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் மேகாலயாவிலும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.

இன்னும் மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கும் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் இடங்களை தக்க வைக்கவும், இல்லாத இடங்களை ஆளும் கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சியே இல்லாதபோதும், அங்கெல்லாம் அது எப்படி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

image

பாஜக உடைத்த பிம்பம்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், “பாஜக, பார்ப்பனர்களின் நலன்களுக்கானது என்ற பிம்பத்தை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி உடைத்துள்ளது. அவர்களுக்கு என வழங்கப்பட்ட அதிகாரங்களை இன்று, அந்தக் கட்சி அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் கொடுத்து அவர்களையும் அரியாசனத்தில் அமரவைத்து வருகிறது. சாதாரண உறுப்பினர்கள்கூட உயர்ந்த இடத்துக்குச் செல்லலாம் என்பதற்கு பாஜக சமீபத்திய உதாரணமாக இருக்கிறது.

பதவிகளில் பலருக்கும் முன்னுரிமை

அந்தக் கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் ஆளுநர், மாநிலத் தலைவர் எனப் பல பொறுப்புகளிலும் தேசிய அளவிலும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனாலேயே தொண்டர்கள் பலர் பாஜகவுக்கு படையெடுக்கின்றனர். கட்சியிலும் பல மட்டங்களில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல், பாஜகவின் கட்சி பதவிகளிலும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகளவில் கட்சியின் மத்திய நிர்வாக பொறுப்புகளில் 16.9 சதவீதம் பெண்களை பாஜக நியமித்துள்ளது.

image

பிரதமர் மோடியின் பயணமும் பரப்பரையும்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிராமப்புறங்களின் வளர்ச்சியையும், அம்மக்களின் தேவைகளையும் கவனத்தில்கொண்டு அதற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இலவச கேஸ், கிராம்புற வீடுகள், கழிப்பறைகள் ஆகியன முக்கியமானவை ஆகும். மேலும், மாநில கட்சிகளின் பலவீனத்தைக் கையிலெடுத்து அதற்கு எதிராக காய்களை நகர்த்திவருகிறது. தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் மோடியின் வருகையும், அவருடைய பேச்சும் அம்மாநில மக்களைக் கவர்ந்திழுத்து வருகிறது. அதிலும் தேர்தல் நேரத்தின்போது பிரதமர் மோடியின் வருகை உற்றுநோக்கப்படுகிறது. மாநில தேர்தலின்போது பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். பாஜக என்கிற கட்சியைவிட பிரதமர் மோடியின் பரப்புரை, பலமானதாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள்

இதுதவிர, எதிர்க்கட்சிகளின் தவறுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதிலும், ஆசைகாட்டி மாநில தலைவர்களைத் தன் கட்சிக்குள் இழுத்துக் கொள்வதிலும், அம்மாநிலத்தில் பிரபலமானவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பதிலும், தேர்தல் நேரத்தின்போது அம்மாநிலத்தில் பல திட்டங்களைக் கொண்டுவருவதிலும் பாஜக சிறப்பாகவே செயல்படுகிறது. அதேநேரத்தில், மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அப்பால், பாஜக ஓட்டு வங்கியையும் அடையாளம் காண்கிறது. அந்த நேரத்தில், எதை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும், வெறுக்கப்படும் சூழல் எது, அணைக்கப்பட வேண்டியது எவை என எல்லாச் சமூக அடிப்படையிலான நுணுக்கங்களையும் தெளிவாகத் தெரிந்துகொண்டு காய் நகர்த்துகிறது.

image

குஜராத் மாடல் ஆட்சி

இன்னும் சொல்லப்போனால், கட்சிகளை உடைப்பது, ஆட்சிகளை கவிழ்ப்பது; மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிப்பது எனப் பலவற்றிலும் பாஜக கைவைத்து தன்னுடைய கனவுகளை நிஜமாக்கிக் கொள்கிறது. மேலும், குஜராத் மாடல் ஆட்சியைத்தான் மற்ற மாநிலங்களிலும் கொள்கையாக வைத்திருக்கிறது. அங்கே செயல்படுவதைப் போன்றே மற்ற மாநிலங்களிலும் செயல்பட கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால்தான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்கூட அது வெற்றி பெறுகிறது. பாஜகவின் இந்த திட்டங்களால்தான் பல மாநில கட்சிகளும் அச்சத்தில் உள்ளன” என்கின்றனர்.

- ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்