புதுடெல்லி: செயற்கைக்கோள் இருப்பிடத்தைக் கண்டறியும் ஸ்டார் சென்ஸார் கருவியின் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய வான் இயற்பியல் மையத்தின் (ஐஐஏ) விஞ்ஞானிகள் குறைந்த செலவில் ஸ்டார் சென்ஸார் கருவியை உருவாக்கினார். ‘ஸ்டார் பெரி சென்ஸ்’ என பெயரிடப்பட்ட இது, இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டில் பரிசோதனை முறையில் இணைத்து அனுப்பப்பட்டது. இது விண்வெளியில் செயற்கைக் கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிவிக்கிறது. விண்ணில் உள்ள நட்சத்திரங்களை அடையாளம் காண்பதன் மூலமாக, இந்த ஸ்டார் சென்ஸார், தான் இருக்கும் இடத்தை கணக்கிடுகிறது.
இந்த ஸ்டார் சென்ஸார், விண்வெளியில் மிக கடுமையான சூழலையும் தாங்கும் திறனோடு இருப்பதுடன், எதிர்பார்த்தபடி செயல்படுகிறது. இதன் மூலம் செயற்கைக்கோள்களின் இருப்பிடத்தை துல்லியமாக கணக்கிட முடியும். முதல் முறையாக இந்தகருவி விண்வெளியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ‘ரேஸ்பெர்ரிபை’ என்ற மினிகம்ப்யூட்டர் அடிப்படையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருட்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என இத்திட்டத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை வகிப்பவரும், ஐஐஏ பி.எச்டி. மாணவருமான பாரத் சந்திரா தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டார் சென்ஸார் கருவியின் சிறப்பம்சம். இதை தயாரிப்பதும் எளிது. இதை எல்லா வகை செயற்கைக்கோளிலும் பொருத்தி அனுப்ப முடியும் என்கிறார் பாரத் சந்திரா.
0 கருத்துகள்