18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு பதில் COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்வதற்காக ஏராளமானோர் நள்ளிரவு 12மணி முதல் முயற்சித்தனர். ஆனால் 45வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என வந்ததால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொறுத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
18 வயதை கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பதிவு செய்து கொள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று அவசியம். செல்போன் நம்பரை பயன்படுத்தியும் பதிவு செய்துகொள்ளலாம். ஒரு செல்போன் நம்பரில் நான்கு பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி புகைப்பட அடையாள அட்டைகள் அவசியம். பதிவு செய்யும்போது அவரவர் விருப்பப்படும் மையத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்