மகாராஷ்டிராவில் இளைஞர் சிகிச்சைப் பெற வேண்டும் என்பதற்காக கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் தன்னுடைய படுக்கையை விட்டுக்கொடுத்து, உயிர்த் தியாகம் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயதான நாராயண் பவுராவ் தபட்கர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உடலில் ஆக்ஸிஜன் அளவு 60 ஆகக் குறைந்து மோசமான நிலையில் இருந்த நாராயண் பவுராவ் தபட்கரை அவரது உறவினர்கள் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. இருப்பினும் பலகட்ட முயற்சிக்குப் பின்னர், நாராயண் பவுராவ் தபட்கருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கை இடம் கிடைத்தது.
அவர் மருத்துவமனையிலிருந்த நேரத்தில் பெண் ஒருவர் அழுதுகொண்டே தனது கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து நின்றார்.
இதை கவனித்த நாராயண் பவுராவ், தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுக்க முடிவு செய்தார். ஆனால் உங்களுக்கே பெரும் சிரத்தைக்கு பின்தான் படுக்கை கிடைத்து. அதைக் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
அதற்கு நாராயண் பவுராவ், ''நான் 85 வயதைத் தாண்டிவிட்டேன். அதோடு வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டேன். ஆனால் அந்த மனிதனுக்குப் பின்னால் ஒரு முழு குடும்பமும் இருக்கிறது. அந்த நபரின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தேவை. அவருக்கு ஏதாவது நடந்தால் மொத்த குடும்பமும் நிர்க்கதியாகி விடும்'' எனக் கூறி நாராயண் பவுராவ் தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் நாராயண் பவுராவ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குத் தனது சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். ஆனால் வீட்டிற்குச் சென்று மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு போராடி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், நாராயண் பவுராவ் செய்த தியாகம் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்