Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்

மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.

"நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" என மத்திய அரசை காட்டமாக டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே என கேள்விகளை எழுப்பினர்.

தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்" என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

image

"முந்தைய தினமே இந்த வழக்கை விசாரித்தபோது ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்துங்கள் என கூறியிருந்தோம். ஒருநாள் முடிந்துவிட்டது. என்னதான் செய்து இருக்கிறீர்கள்?" என மீண்டும் அழுத்தமான கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், "டாடா நிறுவனம் தனது சார்பில் ஆக்சிஜனை உருவாக்கும்போது மற்றவர்கள் ஏன் அதனை செய்யக்கூடாது? இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடப்போவதில்லை. எனவே மருத்துவ சேவைக்கான ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்யுங்கள்" என நீதிபதிகள் கூறினர்.

ஏற்கெனவே தலைநகர் டெல்லிக்கு 420 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கைகளை உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது, "மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வருவதை உறுதிப்படுத்துங்கள். தேவைப்பட்டால் வான்வழியாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுங்கள்" என கூறினர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்