Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

லாரி போக்குவரத்து துறைக்கு தினசரி இழப்பு ரூ.1,600 கோடி: உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

லாரி போக்குவரத்துத் துறைக்கு தினசரி இழப்பு ரூ.1,600 கோடி என்று பதிவாகியிருப்பதை தொடர்ந்து, உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பகுதி அளவாகவோ அல்லது முழுமையாகவோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் லாரி போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்தியாவில் 25 லட்சம் லாரிகள் உள்ளன. இதில், குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தலைவர் பால் மல்கித் சிங் தெரிவித்திருக்கிறார்.

இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.1,600 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதே நிலைமை நீடித்தால் மே மாதம் மட்டும் லாரி உரிமையாளர்களுக்கு மொத்தமாக சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவித்திருக்கிறார்.

image

பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு இருப்பதால் தேவையும் கடுமையாக சரிந்திருக்கிறது. இதனால், லாரி வாடகையும் சுமார் 30 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. மாறாக, டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. தேவை இல்லாததால் வாடகை குறைவு மற்றும் டீசல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் லாரி போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் லாரி போக்குவரத்து துறையை நம்பி 40 லட்சம் டிரைவர்கள் இருக்கிறார்கள். அதேபோல லாரி உதவியாளர்களாக சுமார் 25 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள். தற்போது தேவை குறைந்திருப்பால், இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் - மகாராஷ்டிர அரசு உத்தரவு

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவினை வெளியிட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழையும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என அறிவித்திருக்கிறது. மாநிலத்துக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, இந்த சோதனை முடிவு 7 நாட்களுக்கு மட்டுமே செல்லும். அதேபோல லாரியில் இருவருக்கு மேலே பயணம் செய்ய கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய உத்தரவு மே 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது.

இது நடைமுறையில் சாத்தியப்படாது என அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. இந்த சோதனை முடிவுகள் கிடைப்பதற்கே 48 மணி நேரம் ஆகும்பட்சத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக எப்படி பரிசோதனை செய்துகொள்ள முடியும் என கேள்வி எழுப்பி இருக்கிறது.

அதேபோல பல மாநிலங்களில் இருந்து லாரிகள் மகாராஷ்டிராவுக்கு வருகின்றன. தவிர, தென் இந்தியாவில் இருந்து மகாராஷ்டிரா மூலமாக வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. இதுபோல பயணத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சோதனை செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இருகிறது.

இது சாத்தியம் இல்லாதது மட்டுமல்லாமல், இந்த உத்தரவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் லாஜிஸ்டிக்ஸில் பெரும் சிக்கல் உருவாகும். மருத்துவமனை சாதனங்கள், காய்கறி, பழங்கள், எப்.எம்.சி.ஜி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் மோட்டார் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

image

அதேபோல பயணத்தில் இருக்கும் டிரைவர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற சோதனை செய்வது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரும் என்பதால் அரசு இந்த உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறது.

ராபிட் ஆண்டிஜன் சோதனை

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு பதிலாக ராபிட் ஆண்டிஜன் சோதனை நடத்தலாம் என மோட்டார் காங்கிரஸ் மாற்று ஆலோசனை வழங்கி இருக்கிறது. மாநிலத்துக்குள் நுழையும் வாகனங்களில் உள்ளவர்களுக்கு ராபிட் ஆண்டிஜன் சோதனை செய்வதன் மூலம் காத்திருக்கும் நேரம் குறையும். அதேபோல சோதனை சாவடிகளில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மோட்டார் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

புதிய உத்தரவு முக்கியம். அதேசமயம் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உணவுபொருட்கள் விலை உயரும் அபாயம் உருவாக் கூடும்.

- வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்