கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் நம்பிக்கை அளித்து வந்த இளம்பெண் ஒருவர், அதே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அந்த மகத்துவம் வாய்ந்தவர் குறித்து சற்றே விரிவாகப் தெரிந்துகொள்வோம்.
கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி லட்சக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில், உரிய சிகிச்சை இல்லாமலும், ஆக்சிஜன் இல்லாமலும், ஐசியு படுக்கை வசதிகள் இல்லாமலும் அவர்கள் படும் துன்பங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு தாங்கள் நிச்சயம் இந்தப் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்புவோம் என நம்பிக்கை வழங்கி வந்தவர் 30 வயது ஸ்ருதி.
இவர் ஐந்து வயது குழந்தையின் தாய். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டபோது, மிகவும் மோசமான நிலைமையில்தான் இருந்துள்ளார். இவருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி, ஐசியு போன்றவை எதுவும் கிடைக்காத நிலையில், தற்காலிகமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
என்.ஐ.வி (NIV) எனப்படும் தற்காலிக ஆக்சிஜன் சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்ட நிலையிலும் நம்பிக்கை இழக்காத ஸ்ருதி, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், தனக்கு ஏதாவது பாடலை இசைக்க செய்யுமாறு கேட்டுள்ளார்.
சிகிச்சை அளித்த மருத்துவர் மோனிகா என்பவரும் ஸ்ருதிக்குப் பிடித்த ஷாருக்கான் பாடலை ஒலிக்க விட, படுக்கையில் உட்கார்ந்தபடியே மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தபோதும் கை, கால்களை அசைத்து நடனம் ஆடியுள்ளார். பொதுவாக, மூச்சு பிரச்னை உள்ளிட்ட மிக மோசமான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகள் மிகவும் சோர்வுடன் மன நம்பிக்கையில்லாமல் காணப்படுவார்கள். ஆனால், அதை மீறி மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்துள்ள ஸ்ருதியின் செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் டாக்டர் மோனிகா. (இணைப்பு: https://twitter.com/drmonika_langeh/status/1391062602860482562?s=20 )
தங்களது அன்பிற்கினியவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துவிட்டு கவலையுடன் காத்திருந்த பலரும் அந்த வீடியோவை பார்த்தவுடன் நம்பிக்கை பிறந்ததாக சமூக வலைதளத்தில் கூறினர். அந்த வீடியோவை ட்விட்டர் சமூக வலைதளத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தனர். கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இதனை செய்தி ஆக்கின.
இப்படி எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க கூடிய நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதியின் உடல் நிலை மோசம் அடைந்துவிட்டதாகவும், அனைவரும் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் மருத்துவர் மோனிகா தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நாடு முழுவதும் பலரும் கவலையை ஏற்படுத்தி இந்தச் செய்தியை மேலும் கவலையை அதிகரிக்கும் வகையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தகவல் பகிர்ந்துள்ளார்.
தாங்கள் எவ்வளவோ போராடியும் ஒரு தைரியமான உயிரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை; அவரது ஆன்மா சாந்தியடையட்டும்; அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன உறுதி கிடைக்கட்டும் என மருத்துவர் மோனிகா மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதியின் மறைவு தனது சொந்த குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல இருப்பதாகவும், இதிலிருந்து மீள தனக்கு சில நாட்கள் கூட ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கானவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைத்த ஸ்ருதி, இன்று வானில் மின்னும் நட்சத்திரமாய் மாறி இருக்கிறார். அந்த மன தைரியம் வாய்ந்த ஆன்மாவிற்கு நாமும் அமைதி கிடைக்கட்டும் என வேண்டுவோமாக.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்