மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, வீட்டிற்குள் இரண்டு நாட்களாக இறந்து கிடந்த தாயின் உடலுக்கு பக்கத்தில் பசியுடன் இருந்த ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
கொரொனா தொற்று பயம் காரணமாக இவர்களின் வீட்டிற்குள் யாரும் சென்று பார்க்கவில்லை, துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து, சடலமாக கிடந்த பெண்ணின் உடலையும், அவருக்கு அருகில் இருந்த குழந்தையையும் கண்டுபிடித்தனர். அந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது, அதன்பின் இருநாட்களாக 18 மாத குழந்தை உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்தது.
குழந்தையை வாங்க அக்கம்பக்கத்தினர் தயங்கினாலும், போலீஸ் கான்ஸ்டபிள்களான சுஷிலா கபாலே மற்றும் ரேகா வேஸ் ஆகியோர் பொறுப்பேற்று அந்த குழந்தைக்கு உணவளித்தனர். "எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே என் சொந்த குழந்தையைப் போல உணர்ந்து மிகவும் பசியுடன் இருந்த அக்குழந்தைக்கு உடனடியாக பால் கொடுத்தேன்" என்று சுஷிலா கபாலே கூறினார். "நாங்கள் குழந்தையை மருத்துவரிடம் காட்டியபோது குழந்தைக்கு கொஞ்சம் காய்ச்சல் இருந்தது. அவருக்கு நன்றாக உணவளிக்கச் சொன்னார், இப்போது நன்றாக இருக்கிறது.அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை" காவலர் ரேகா கூறினார்
அக்குழந்தையின் தாயின் பிரேத பரிசோதனையில் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் தெரியவில்லை. அவருக்கு கொரோனா இருந்ததா என்பதும் தெரியவில்லை. "அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக உத்தரபிரதேசத்திற்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அவர் திரும்பி வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜாதவ் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்