நொய்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேரும் பொருட்டு, காரில் காத்திருந்த போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. வட மாநிலங்களிலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் நெஞ்சைப் பதைபதைக்கவைப்பதாக இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேரும் பொருட்டு, காரில் காத்திருந்த போதே உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ஜக்ரிதி குப்தா (வயது 35). இவரது கணவரும் 2 குழந்தைகளும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜக்ரிதி குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள அரசு ஜிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெறுவதற்காக காரில் வந்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால், மருத்துவமனை வளாகத்தில் காரில் அமர்ந்து படுக்கைக்காக 3 மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜக்ரிதி குப்தாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காரிலேயே உயிரைவிட்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்