கொரோனா காலத்தில் வேலை இழந்த நிலையிலும் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்தர். பொறியியல் படித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா முதல் அலையின்போது இவருக்கு வேலை பறிபோனது. அதனைத்தொடர்ந்து அடுத்த வேலையை தேடாமல், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் We Care Mylapore என்ற அமைப்பை தனது நண்பருடன் இணைந்து தொடங்கினார். அந்த அமைப்பு மூலம் சாலையோர மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார்.
தங்கள் சொந்தச் செலவில் தினமும் 10 பேருக்கு உணவு வழங்கி சேவையை தொடங்கிய இவர்கள், தற்போது நாள்தோறும் 40 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். கொரோனா காலத்தில் யாரும் உணவில்லாமல் இருக்கக்கூடாது என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் இருப்போருக்கு அறக்கட்டளையுடன் இணைந்து உணவளித்து வருகின்றனர். மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தவெளி, மெரினா கடற்கரை பகுதிகளில் உணவு வழங்கி வரும் இந்த இளைஞர்கள், அம்மா உணவகங்கள் மூலம் தமிழக அரசு ஒரு நேரமாவது இலவச உணவு வழங்கி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்