மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப் பணியார்களாக கருதப்படுவர் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவத்துறை, காவல்துறை, ஊடகத்துறை மற்றும் சில துறைகளை அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மயானங்களில் தகனம் செய்ய உடல்கள் நீண்ட வரிசைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மயானப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமால் கடும்சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப் பணியார்களாக கருதப்படுவர் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மயான பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் வழங்கும் எனவும், கொரோனா காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னை பற்றி முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும் ரெம்டெசிவிர் மருந்துபற்றி பேசிய அமைச்சர், மருந்து விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்யவிருக்கிறோம்; தேவையற்ற வகையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதி கொடுப்பது, கூட்டம் கூடுவது நோய் பரவ வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்