ஆக்சிஜன் வசதிகொண்ட ஆம்புலன்ஸ் 10 கி.மீ வரை ரூ.2000 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசு கூறியிருக்கிறது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பலரும் ஆம்புலன்ஸ் சேவைக்காக 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தாலும், உடனடியாக சேவை கிடைக்காத நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளும், ஆம்புலன்ஸ்களும் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, நோயாளிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்கள் சேவைகளுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே கட்டணமாக வசூலிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அடிப்படை ஆக்சிஜன் வசதிகொண்ட ஆம்புலன்ஸ் 10 கி.மீ வரை ரூ.2000 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டுமெனவும், சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கலாம் எனவும், வெண்டிலேட்டர் வசதிகொண்ட ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.4000 மட்டுமே வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக ரூ.25 வசூலித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்