Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கன்னியாகுமரி: புயல் எச்சரிக்கை எதிரொலி; அவசரமாக கரை திரும்பும் ஆழ்கடல் விசைப்படகுகள்!

புயல் எச்சரிக்கை எதிரொலியாக  ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பி வரும் நிலையில் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க, வரும் 14,15,16 தேதிகளில்  மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

image

இதையடுத்து மீன்வளத்துறை சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் குமரி மாவட்டத்தில் இருந்து அரபிக்கடலில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் கரை திரும்பவும், 3 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீன்பிடிக்க சென்ற 100-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள், பாதியிலேயே கரை திரும்பி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்