டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகளில் திறன்மிக்க ஊழியர்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக பெரு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், நாம் அனைவருமே கவனத்தில் கொள்ளக்கூடிய விஷயமாக மாறிவருகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகள் அனைத்தும் இந்த தொற்றுநோய் காலத்திலும் விரைவாக வளர்ந்து வருகிறது. ஆனால், இங்கிலாந்து போன்ற நாடுகளில் டிஜிட்டல் திறன் மிக்க பணியாளர்களின் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறுகிறது ஒரு தரவு. இந்தியாவில் தற்போது 12 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் திறன் மிக்க பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. இதை காரணமாக முன்னிறுத்தி, நாட்டில் டிஜிட்டல் திறன் மிக்க தொழிலாளர்கள் தேவையானது 2025-ம் ஆண்டுக்குள் ஒன்பது மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஒரு புதிய சர்வே அறிக்கை சொல்கிறது.
மார்க் ரைட் என்பவர் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'தி அப்ரெண்டிஸ்' 2014ஐ வென்ற பிறகு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான க்ளைம்ப் ஆன்லைன் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, "தேவையான டிஜிட்டல் திறன்களைக் கொண்டவர்கள் போதுமானதாக இல்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. பேஸ்புக், கூகுள் போன்றவற்றில் விளம்பர ஒளிபரப்பு கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதற்கும் ஒரு பெரிய திறன் பற்றாக்குறை உள்ளது" என்று கூறியுள்ளார். இவரின் நிறுவனத்தில் 14 காலியிடங்கள் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அதற்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
தொடர்ந்து பேசியுள்ள மார்க் ரைட், "இங்கிலாந்தில் உள்ள தொழில் வல்லுநர்கள் இந்த டிஜிட்டல் திறன் பற்றாக்குறை குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர். இதை அவர்கள் பேரழிவு என்று அழைக்கின்றனர். மேலும், இந்த புதிய திறன்களை பணியாளர்கள் வளர்க்காவிட்டால் நாடு விளைவுகளை சந்திக்கும் என்று தொழில் வல்லுநர்கள் அஞ்சி வருகின்றனர்" என்றுள்ளார்.
இவர் மட்டுமல்ல, அமேசான் வெப் சர்வீசஸ் (ஏ.டபிள்யூ.எஸ்) வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இந்தியாவிலும் இந்தப் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே ஒரு சராசரி தொழிலாளி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப 2025-ம் ஆண்டுக்குள் ஏழு புதிய டிஜிட்டல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப தேவையின் முதல் அலைக்கு இந்தியா வெற்றிகரமாக பங்காற்றியது, ஆனால் புதிய திறன் தேவை வேகமாக மாறுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 150 மில்லியன் புதிய தொழில்நுட்ப வேலைகள் உருவாக்கப்பட உள்ளன என்று லிங்க்ட்இன் ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும், பலர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதைத் தள்ளிவைக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்கட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல், 2020 ஆம் ஆண்டில் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஒரு அறிக்கையில், "இங்கிலாந்தில் உள்ள மக்களில் 61 சதவீதம் பேர் டிஜிட்டல் திறன்களைக் கொண்டுள்ளனர். அதுவே அமெரிக்காவில் 69.4 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். இந்த இடைவெளியைக் குறைக்க ஒரு திறன் புரட்சியை வழங்குவதாக இங்கிலாந்து அரசு உறுதியளித்துள்ளது. ஆனால் இங்கிலாந்தின் மக்கள்தொகையில் 40 சதவீதத்தினர் டிஜிட்டல் திறன்கள் இல்லாமல் இருப்பதால், ரைட் போன்ற நிறுவனங்களின் உடனடி பணியாளர்கள் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியாவில், சுமார் 70 சதவீத தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் மேம்பட்ட டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்தினர் என்று AWS அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தேவைப்படும் முதல் ஐந்து டிஜிட்டல் திறன்கள் கிளவுட் கட்டிடக்கலை வடிவமைப்பு (cloud architecture design); மென்பொருள் செயல்பாடுகள் ஆதரவு (software operations support); வலைத்தளம், விளையாட்டு அல்லது மென்பொருள் மேம்பாடு; பெரிய அளவிலான தரவு மாடலிங் மற்றும் இணைய பாதுகாப்பு திறன் (cybersecurity) ஆகியவை ஆகும் என்று அதே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் வரும் காலங்களில் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒரு அத்தியாவசிய திறமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறுகிறது இதே அறிக்கை.
டிஜிட்டல் திறன் பயிற்சி!
டிஜிட்டல் திறனை வளர்த்துக்கொள்ள வல்லுநர்கள் சொல்வது, தங்கள் சொந்த திறன்கள் மற்றும் பலங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே. ஆன்லைனில் சென்று சில திட்டங்கள் மற்றும் இலவச பயிற்சியைப் பார்க்க வேண்டும். பிற துறைகளில் உள்ளவர்கள் கூட புதிய டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்வதில் தயங்கக்கூடாது என்பதே அவர்கள் தரும் அறிவுரையாகஇருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்