Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்'ல் வீடியோ பதிவிடும் கிரியேட்டகள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு - எப்படி?

இன்ஸ்டாகிராமில் குறும் வீடியோக்களை பதிவேற்றும் 'ரீல்ஸ்' வசதியை பயன்படுத்தும் கிரியேட்டர்களுக்கு போனஸ் வடிவில் வருவாய் அளிக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்த சேவை மூலம் குறும் வீடியோக்களை பகிர்பவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான 'இன்ஸ்டாகிராம்' ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படங்களை பகிரும் சேவையில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

இதனிடையே, 'டிக் டாக்' செயலி வாயிலாக 15 விநாடி வீடியோ வடிவம் பிரபலமாகவே, போட்டியை சமாளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் தனது மேடையிலும் 15 விநாடி குறும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள 'ரீல்ஸ்' வசதியை அறிமுகம் செய்தது.

image

இன்ஸ்டாகிராம் போலவே, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இந்தப் பிரிவில் ஷார்ட்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் பிரபலமாக்கிய குறும் வீடியோ பிரிவின் செல்வாக்கு வளர்வதன் அடையாளமாக இது கருதப்படுகிறது.

இந்த நிலையில், 'ரீல்ஸ்' படைப்பாளிகளுக்கு உற்சாகம் அளிக்க கூடிய புதிய திட்டத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 'ரீல்ஸ்' வசதி மூலம் குறும் வீடியோக்களை உருவாக்கி பகிர்பவர்களுக்கு இன்ஸ்டாகிராம் போனஸ் வடிவில் பணம் அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அலிசாண்ட்ரோ பலூசி (Alessandro Paluzzi) என்பவர் இந்த தகவலை ஸ்கிரீன்ஷாட் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வசதி வழக்கமான பயனாளிகளுக்கு அல்லாமல், குறும் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். புதிய வீடியோக்களை வெளியிடும்போது இந்த போனஸ் வழங்கப்படும்.

யூடியூப்பில் பணம் ஈட்டுவதற்கான தகுதியை பெற ஒரு வரம்பு இருப்பது போல இன்ஸ்டாவிலும் போனஸ் ஈட்ட ஒரு வரம்பு நிரண்யிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த வரம்பை பூர்த்தி செய்பவர்கள் போனஸ் மூலம் பணம் ஈட்டத் துவங்கலாம்.

ரீல்ஸ் வசதியில், அதன் பார்வைகள் எண்ணிக்கை, சேமிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம். இவையும் போனஸுக்கான அம்சங்களில் பரிசீலிக்கப்படும். போனஸ் தொடர்பான தகவல்களை படைப்பாளிகள் தங்கள் பக்கத்தில் பார்க்கலாம்.

எனினும், இந்த வசதி பற்றி இன்னமும் இன்ஸ்டாகிராம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான திட்டத்தில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

- சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்