Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"தீதி இல்லாமல் வாழமுடியாது!" - மம்தா கட்சியில் மீண்டும் சேர விரும்பும் பாஜகவின் சோனாலி

திரிணாமூல் கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் சேர்ந்த பெண் தலைவர் சோனாலி குஹா திடீர் ட்விஸ்டாக மீண்டும் மம்தாவுடன் சேர கடிதம் எழுதியிருக்கிறார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நான்கு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை துணை சபாநாயகராவும் இருந்தவர் சோனாலி குஹா. இவர் ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் `நிழல்' என்று வர்ணிக்கப்பட்டவர். அந்த அளவுக்கு மம்தாவுடன் நெருக்கம் காண்பித்து வந்தவர்.

இதற்கிடையே, இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட மம்தா வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சி சேனல்களில் உணர்ச்சிவசப்பட்டபடி தோன்றி திரிணாமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக அறிவித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவில் சேர்ந்தாலும், தேர்தலில் களமிறங்கவில்லை. பாஜகவை தனது தொகுதியில் வலுப்படுத்தும் வகையில் தேர்தல் பணியாற்றப்போவதாக அறிவித்து கட்சிப்பணிகளில் கவனம் செலுத்திவந்தார்.

இந்த நிலையில், சோனாலி குஹா தற்போது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``உணர்ச்சிவசப்பட்டு, வேறொரு கட்சியில் சேருவதற்கான தவறான முடிவை எடுத்தேன். உடைந்த இதயத்தோடு இதை எழுதுகிறேன். ஒரு மீன் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியாது, நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது, தீதி. நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால், என்னால் வாழ முடியாது.

image

திரும்பி திரிணாமூல் கட்சிக்கு வர தயவுசெய்து என்னை அனுமதிக்கவும். அனுமதித்தால் என் வாழ்நாள் முழுவதையும் உங்கள் பாசத்திலேயே கழித்துவிடுவேன்" என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தி சேனலுக்கு பேசியவர், ``பாஜகவில் சேருவது என நான் எடுத்த முடிவு தவறானது. இன்று அதை என்னால் உணர முடிகிறது. அந்தக் கட்சியை விட்டு வெளியேறுவது பற்றி பாஜகவிடம் சொல்ல வேண்டும் என நினைக்கவில்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அங்கு இருந்தபோது எப்போதும் அந்தக் கட்சிக்கு தேவையற்றவளாகவே உணர்ந்தேன்.

அவர்கள் என்னை மம்தா தீதிக்கு எதிராக பயன்படுத்த முயன்றார்கள். நான் தனிப்பட்ட முறையில் தீதியைச் சந்திக்க முயற்சிப்பேன், ஆனால் அவர் முதலமைச்சர், பிஸியாக இருப்பார். சமீபத்தில் காலமான அவரது சகோதரரின் இறுதி சடங்குகள் திட்டமிடப்பட்ட நாளில் அடுத்த வாரம் நான் அவரது இல்லத்திற்குச் சென்று அவருடன் பேச முயற்சிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்