12ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக ஜூன் 1ஆம் தேதி மத்திய அரசும், அதேபோல தமிழகத்திலும் ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசும் அறிவித்து, மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில், ''கொரோனா முதலாவது அலையினால் 11ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தான் தற்போது 12ஆம் வகுப்பு முடித்துள்ளனர். சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ பள்ளிகள் தவிர 2020 - 21 கல்வியாண்டில்
மாநில அரசின் பாடத்திட்டத்தில் கீழ் செயல்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளையோ, தேர்வுகளையோ சரிவர நடத்தவில்லை.
கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் பன்னிரெண்டாம் வகுப்புகளை நடத்தி முடித்து இருந்ததால், அனைத்து வகையான கல்லூரி படிப்புகளுக்கும் பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், கல்லூரி படிப்புகளுக்கான நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல், தேர்வை ரத்து செய்தது தவறு.
12ஆம் வகுப்பு தேர்வை கேரளா, பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே முடிந்துள்ளது. அசாமில் ஜூலை மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இன்னும் ஒரிரு மாதங்கள் பொறுத்திருந்திருக்கலாம். அரசின் இந்த முடிவு முறையாக பயின்ற மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது'' என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஓரிரு மாதங்களுக்கு பிறகு தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிய இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டுமெனவும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள், அரசின் முடிவில் தலையிட முடியாது என கூறியதுடன், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டனர். மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்