பள்ளிக்கல்வி துறை வளாகத்தை சில சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை வளாகம் அமைந்துள்ளது. இங்கு பள்ளிக் கல்வி துறை நூற்றாண்டு விழா கட்டடம், அரசு தேர்வுகள் இயக்ககம், பள்ளி கல்விக்கான மாநில திட்ட இயக்ககம், தனியார் பள்ளி இயக்ககம், வயது வந்தோர் கல்வி திட்டம் ஆகிய முக்கிய பள்ளி துறை தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளது.
மாவட்ட கல்வி இயக்குனர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கூட்ட அரங்கு மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறை ஆகியவையும் இந்த வளாகத்தில் தான் உள்ளது. இந்நிலையில் சில சமூக விரோதிகள் மது அருந்துவது, தடை செய்யப்பட்ட புகையிலை உட்கொள்ளவது ஆகியவற்றிற்காக இந்த வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் தலைமை கட்டடம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கு கல்வியாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரண்டு நுழைவு வாயில்கள் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் கண்காணிப்பு பெரிய அளவில் இல்லாமல் இருப்பதே இது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வளாகத்தை தூய்மை படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் ஆட்கள்நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
- பால வெற்றிவேல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்