தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர்.
பெற்றோர், மாணவர்களிடம் இரண்டாவது நாளாக கருத்து கேட்பும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பார் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்எஸ் பாலாஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பின்னர், முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, இன்று மாலை அல்லது நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறதா? அல்லது ரத்து செய்யப்படுகிறதா? என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும், மதிப்பெண் அதிகம் வேண்டும் விருப்பப்படும் மாணவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது. அவ்வாறு இல்லாவிடில், கொரோனா பரவல் குறைந்த பிறகு முக்கியமான 4 பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரியில் தேர்வு எழுதும் மையங்களை அமைத்து, தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்வு நடத்துவதற்கு பெரும்பாலான பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இவை அனைத்தும் அரசின் முன் இருக்கும் வாய்ப்புகளாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் மருத்து வல்லுநர்களின் ஆலோசனைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும் என கருதப்படுவதால் பிளஸ் டூ தேர்வு குறித்த அரசின் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்