Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 6,148 பேர் உயிரிழப்பு - காரணம் என்ன?

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதற்கான காரணத்தை அலசுகிறது இந்தக்கட்டுரை.

இந்தியாவில் ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்றிற்கு 86,161 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் சற்று அதிகரித்து ஒருநாள் பாதிப்பு 92,596 ஆக
பதிவாகி உள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழாக
குறைந்துள்ளது.

உயிரிழப்புகளை பொருத்தவரை சில நாட்களாக 2 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற எண்ணிக்கை இன்று அதிகபட்சமாக 6,148 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கை எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாற்றம் என்ற சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது. 

ஆனால் இதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறுதணிக்கை செய்யப்பட்டதே. பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில், 3,951 கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் காட்டப்படவில்லை என்பது தெரிய வந்தது. அந்த எண்ணிக்கை இன்றைய மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் இன்றைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,148  எனக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,197 ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பீகாரில் நிகழந்த  3,951 உயிரிழப்புகள் பெரும்பாலும் 2 கொரோனா அலையில் நேர்ந்தவை.

என்ன நடந்தது பீகாரில்

பீகார் அரசு கொரோனா பாதிப்பு நிலவரங்களை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 2 ஆவது அலையின் ஏப்ரல் மாத உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட 3 வார தணிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொற்றிற்கு 1,600 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 7 வரையிலான காலக்கட்டத்தில் 7,775 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த உயிரிழப்பு மேற்குறிப்பிட்ட உயிரிழப்புகளை விட 6 மடங்கு அதிகமாகும்.

முன்னதாக பீகார் அரசு 5,500 பேர் உயிரிழந்ததாக கூறியிருந்தது. இது குறித்து அரசு தரப்பில் கூறும்போது, “தணிக்கைக்குப் பிறகு
அனைத்து மாவட்டங்களிலும் 72 சதவீதம் அதிகமான உயிரிழப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த
தணிக்கை ஆய்வில், கூடுதல் உயிரிழப்புகள் எப்போது நடந்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.” என்றது.

புதிய கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், பாட்னாவில் 2,303 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால், பாட்னாவில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 இடுகாடுகளில் 3,243 பேர் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கூறும் போது, “ பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் சடலம் இங்குள்ள
தகனத்தில் எரிக்கும் பட்சத்தில், அந்த எண்ணிக்கை பாதிக்கப்பட்டவரின் மாவட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கையில் கணக்கிடப்படும்.
இந்த இறப்பு எண்ணிக்கை அவரவர் சொந்த மாவட்டத்தில் கணக்கிடப்பட்டது. பாட்னாவில் அல்ல..” என்று கூறியுள்ளார்.

மறுதணிக்கைக்கு பிறகு, நேற்றைய நிலவரப்படி பீகாரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 9,429 இருப்பது  தெரியவந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்