மேற்கு வங்க தலைமைச் செயலர் அலபன் பண்டாபாத்யாயாவை மத்திய பணிக்கு விடுவிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்த சூழலில், அவர் முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘யாஸ்’ புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். பிரதமரிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை என மனுவை அளித்து விட்டு, தனக்கு வேறு பணிகள் இருப்பதாக கூறி புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை உடனடியாக டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயற்சித் துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், அவர் நேற்று டெல்லிக்கு செல்லவில்லை. அலபன் பண்டாபாத்யாயாவை மத்திய பணிக்கு விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதினார்.
இதற்கிடையில் அலபன் பண்டாபாத்யாயாவின் பதவிக் காலம் நேற்றுடன் (மே 31) நிறைவடைந்தது. எனினும், அவருக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு கோரி மாநில அரசு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு கடந்த மே 24-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், அலபன் பண்டாபாத்யாயாவை முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அப்பதவியில் அவர் 3 ஆண்டுகளுக்குச் செயல்படுவார் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் புதிய தலைமைச் செயலராக ஹெச்.கே.துவிவேதியும் மாநில உள்துறைச் செயலராக பி.பி.கோபாலிகாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்