Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காங்., திமுக 'ஆப்செண்ட்'... சரத் பவார் முன்னெடுப்பும், 'ராஷ்ட்ரா மன்ச்' கூட்டமும் எதற்காக?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில், இந்தக் கூட்டத்திற்காக காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவருமான சரத் பவார் டெல்லியில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மகாராஷ்டிராவில் ஆளும் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தில் உள்ள தனது கூட்டாளிகளான காங்கிரஸ் மற்றும் சிவசேனாவைத் தவிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவர் நடத்தி இருக்கிறார். ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா மற்றும் யஷ்வந்த் சிங் போன்ற இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், பிரபல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என இந்தியாவின் பலம் பொருந்திய ஆட்கள் புதுடெல்லியில் உள்ள சரத் பவாரின் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக அழைக்கப்பட்டிருந்தனர்.

image

மொத்தம் 15 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் 8 எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி சார்பில் ஜெயந்த் சவுத்ரி, சமாஜ்வாடி கட்சியின் கன்ஷ்யம் திவாரி; ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா, சிபிஐயின் பினாய் விஸ்வாம் மற்றும் சிபிஎம்மின் நிலோட்பால் பாசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா, முன்னாள் தூதர் கே.சி.சிங் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் போன்றோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்பு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேமன், ``இந்த சந்திப்பை யஷ்வந்த் சின்ஹா ஏற்பாடு செய்தார். சரத் பவார் அல்ல. அதேநேரம் இது ஓர் அரசியல் சந்திப்பு அல்ல. நடப்பு நிகழ்வுகளை பற்றி விவாதிக்க மட்டுமே சந்தித்தோம். இந்த சந்திப்பு காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது முன்னணிக்கு என்று பேச்சுக்கள் உள்ளன, இது உண்மை அல்ல. பாகுபாடு இல்லை. நாங்கள் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் அனைவரையும் அழைத்தோம். காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்தோம். நான் விவேக் தன்ஹா, மனிஷ் திவாரி, அபிஷேக் மனு சிங்வி, சத்ருகன் சின்ஹா ஆகியோரை கூட்டத்திற்கு அழைத்தேன். அவர்களால் வர முடியவில்லை. நாங்கள் காங்கிரஸை அழைக்கவில்லை என்பது உண்மையல்ல" என்றார்.

காங்கிரஸை போல திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த சந்திப்பை புறக்கணித்தன. அதேபோல் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த உமர் அப்துல்லா முடிவதற்கு முன்பே பாதியிலேயே வெளியேறினார். காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தாலும், கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் சரத் பவார் முன்னாள் முதல்வர் கமல்நாத்தை நேரில் சென்று சந்தித்தார்.

image

முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, ``மூன்றாவது அணி அமைக்க ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. நடப்பு நிகழ்வுகளை விவாதிக்க மட்டுமே கூட்டம்" என்று சரத் பவார் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டது. முன்னதாக பிரசாந்த் கிஷோரும், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், மூன்றாவது அல்லது நான்காவது கூட்டணி, தற்போதைய நிலையில் வெற்றிகரமாக இருக்கும் என நம்பவில்லை. இது தற்போதைய அரசியல் இயக்கத்திற்கு பொருந்தாது" என்றுள்ளார்.

இதற்கிடையே, இந்த சந்திப்பு இவ்வளவு கவனத்தை ஈர்ப்பதற்கான முதன்மைக் காரணம், தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை சரத் பவார் சந்தித்த ஒரு நாளுக்குப் பிறகு ஆலோசனை நடந்ததுதான். மேலும் பிரசாந்த் கிஷோரை பத்து நாட்கள் முன்புதான் சந்திருந்த நிலையில், மீண்டும் அவர்கள் நேற்றுமுன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். இதில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரியில் யஷ்வந்த் சின்ஹாவால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரா மன்ச் பேனரின் கீழ் கூட்டம் நடைபெற்றது.

ராஷ்ட்ரா மன்ச் என்றால் என்ன?

ராஷ்ட்ரா மன்ச்சை தொடங்கிய யஷ்வந்த் சின்ஹா அதை "ஒரு அமைப்பு அல்ல, ஒரு தேசிய இயக்கம் என்றும், கட்சி சாராத அரசியல் நடவடிக்கைக் குழு" என்று அழைத்தார். ``நரேந்திர மோடி அரசாங்கத்தில் ஜனநாயக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக குற்றம் சாட்டிய சின்ஹா. தேசிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி ராஷ்ட்ரா மன்ச் செயல்படும்" என்று அறிவித்தார். இந்த ராஷ்ட்ரா மன்ச் பல மாதங்கள் முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் அந்த நிகழ்வுக்கு சரத் பவார் செல்லவில்லை. ஆனால் அவரின் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி. மஜீத் மேமன் நிகழ்வை தொடங்கி வைத்திருந்தார். என்றாலும், சரத் பவாரை ராஷ்ட்ரா மன்ச்சில் இணைத்தது பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் மற்றும் சரத் பவார் இருவரும் ஒரு காலத்தில் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக கருதப்பட்டவர்கள்.

ஒரு மேடையில் சரத் பவாரை தனது அரசியல் குருக்களில் ஒருவராக பிரதமர் மோடி பகிரங்கமாக ஒப்புக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. இதேபோல், பிரஷாந்த் கிஷோர் இந்தியாவில் பிரபல அரசியல் வித்தகராக மாறியது நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், பின்னர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டபோது அவருடன் இணைந்து பணியாற்றிய பின்பு தான்.

ஆனால் பிரதமர் ஆன பிறகு இருவரும் பிரதமர் மோடியுடன் காட்டி வந்த நெருக்கத்தை குறைக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங், மகாராஷ்டிராவில் சிவசேனா, தமிழ்நாட்டில் திமுக மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் என பிரதமர் மோடிக்கு எதிராளிகளாக பார்க்கப்பட்டு வந்தவர்களுடன் பிரசாந்த் கிஷோர் கூட்டு சேர்ந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சரத் பவாரும், பிரசாந்த் கிஷோரும், தேசிய அரசியலில் ஒரு மாற்று அணியை உருவாக்க கைகோர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

"Wasn't Political," Says NCP After 8 Parties Meet At Sharad Pawar's House

இந்தியாவில் இதற்கு முன்னதாக, மூன்றாவது கூட்டணியை உருவாக்க பல முயற்சிகள் கடந்த காலத்தில் நடந்தாலும், அது தோல்வியடைந்தன. அப்போது காங்கிரஸ் - பாஜக என இரண்டு கட்சிகளும் வலுவாக இருந்தன. ஆனால் தற்போது காங்கிரசின் அடைந்து வரும் சரிவால் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் இருக்கிறது. இதனால் வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்துதான் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இப்போதே இறங்க ஆரம்பித்துள்ளார் சரத் பவார். அவருடன் இணைந்து இந்த பணியில் பிரசாந்த் கிஷோர் முன்னின்று ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதற்காக 10 நாட்களுக்கு முன்பு மூன்று மணிநேரமும், நேற்று அரை மணி நேரமும் ஆலோசனை நடத்தினார்கள் இருவரும். ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் யாரையெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில்தான் நேற்றைய கூட்டம், இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்